Swiss Tamil Events

சுவிட்சர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வு! 

சுவிட்சர்லாந்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வு! 

c8b22159 0c36 4dfb b85d a9788d34e8a0 1536x1025 1

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zürich) நகரின் ஹொக்பெல்டன் (Hochfelden) பகுதியில், போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட ‘மாவீரர் பெற்றோர், உறவினர், உரித்துடையோர் மதிப்பளிப்பு 2026’ நிகழ்வானது நவம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் ஆரம்பமாகியது.

மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உரித்துடையோர் மண்டப வாயிலிலிருந்து பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தமிழர் மரபிற்கமையப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு, மாவீரர் திருவுருவப் படத்திற்கு மக்கள் மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தியாகத்தின் அடையாளமாகத் திகழும் மாவீரர்களின் குடும்பத்தினரைக் கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், மாவீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பறைசாற்றும் நடனங்கள் இடம்பெற்றன.

மேலும், முன்னாள் போராளிகள், மூத்த தாயகப் பாடகர்கள் மற்றும் தாயகக் கவிஞர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து, தாம் விதைத்துவிட்டு வந்த சக போராளிகள், நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கான எழுச்சிப் பாடல்கள், கவிதைகள், சிறப்புரைகள் மற்றும் மாவீரர்களுடனான தங்களது நெகிழ்ச்சியான அனுபவப் பகிர்வுகளையும் மக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட புலம்பெயர் இளந் தலைமுறையினர் பாடல்களுக்கான இசையினை நேரலையாக வழங்கியமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்த தலைமுறையினரிடம் மாவீரர்களின் வரலாற்றையும் இலட்சியத்தையும் கொண்டு சேர்க்கும் விதமாக அமைந்த இந்நிகழ்வு, தாயகத்தில் மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கண்முன்னே கொண்டு வந்தது.

நிகழ்வில் துளசிச்செல்வன் அவர்கள் சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், உறவினர்கள் மற்றும் உரித்துடையோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. அத்துடன், எவ்வித ஒளிவுமறைவுமின்றி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகளுக்கான வரவுசெலவுக் கணக்கு விபரங்கள் மண்டபத்தின் வெண்திரையில் மக்களின் பார்வைக்காக வெளிப்படையாகத் திரையிடப்பட்டமை, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் போராளிகளுக்குப் புகட்டிய நேர்மை மற்றும் கட்டுப்பாட்டின் வெளிப்பாடாக மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இறுதியாக, “ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்” எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய நடைபெற்ற இந்நிகழ்வு, தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடலுடன் உணர்வுபூர்வமாக நிறைவுற்றது.