Swiss Tamilar News

சுவிஸ் தமிழர்களை உலுக்கிய தமிழ் சிறுவனின் மரணம்.!!

சுவிஸ் தமிழர்களை உலுக்கிய தமிழ் சிறுவனின் மரணம்.!!

சுவிட்சர்லாந்தின் Aargau மாநிலத்தில் இடம்பெற்ற கோரமான பணியிட விபத்தில், 16 வயதுடைய இளம் பயிற்சி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை, நவம்பர் 11ஆம் தேதி காலை, Leibstadt பகுதியில் அமைந்துள்ள மரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Kuratle Jaecker நிறுவன வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

அங்கு தொழிற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது இளைஞர் ஒருவர், பொருட்களை ஏற்றி இறக்கப் பயன்படுத்தப்படும் பாரந்தூக்கி இயந்திரம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சாட்சியாளர் ஒருவர் வழங்கிய தகவலின்படி, பாரந்தூக்கி இயந்திரம் இளைஞர் மீது கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Aargau மாநிலக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிகள் அன்றைய தினம் நிறுத்தப்பட்டன. விபத்துக்கான காரணம் மற்றும் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து Aargau மாநிலக் காவல்துறையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

 தமிழ் சிறுவனின் மரணம்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் துயரம்

உயிரிழந்த இளைஞரின் பெயர் Jaden S. என ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ளன.

அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்தத் துயரச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Jaden குறித்து அவரது சகோதரி பேசுகையில், அவர் மிகவும் அன்பானவர், அனைவரிடமும் புரிந்துணர்வுடன் பழகக்கூடியவர் என்றும், குடும்பத்தில் மிகச் சிறந்த சகோதரராக இருந்தார் என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாடுவதிலும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனது சகோதரர் முதலாம் ஆண்டு தொழிற்பயிற்சியிலேயே இருந்ததாகவும், அவர் பாரந்தூக்கி இயந்திரத்தை இயக்குவதற்கு அனுமதி இருந்ததா என்பது குறித்து தங்களுக்குப் புரியவில்லை என்றும் அவரது சகோதரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தினர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும், விபத்தின் பின்னணியில் உள்ள காரணங்களுக்கும் விசாரணையின் முடிவிலேயே தெளிவான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், Kuratle குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Roger Kuratle, இந்தச் சம்பவம் தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

16 வயதிலேயே தனது எதிர்காலக் கனவுகளுடன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ஓர் இளைஞரின் உயிரிழப்பு, Leibstadt பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் Swiss Tamil TV தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.