Swiss Tamilar News

சிறப்பாக நிறைவடைந்த சூரிச் சிவன் ஆலய மகோற்சவம்

சிறப்பாக நிறைவடைந்த சூரிச் சிவன் ஆலய மகோற்சவம்

சிறப்பாக நிறைவடைந்த சூரிச் சிவன் ஆலய மகோற்சவம்

தேர்த்திருவிழா மற்றும் தீர்த்தத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சூரிச், 30 ஜூன் 2026

சூரிச் சிவன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த சில நாட்களாக பக்தி பூர்வமாக நடைபெற்றதுடன், நேற்று நடைபெற்ற வைரவர் திருவிழாவுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

மகோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக கடந்த 18 ஆம் திகதி கணபதி ஹோமம், அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க கிரியைகள் நடைபெற்றன. தொடர்ந்து 19 ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்துடன் மகோற்சவ நிகழ்வுகள் ஆரம்பமானது.

மகோற்சவ காலப்பகுதியில் தினமும் விசேட அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் உள்வீதியுலாக்கள் இடம்பெற்றன. குறிப்பாக ஆனி உத்திரத்தை முன்னிட்டு சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜப் பெருமானுக்கு நடைபெற்ற 1008 சங்காபிஷேகம் பக்தர்களின் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியது.

N2a

கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தேர்த்திருவிழா மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கியதுடன், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேரை இழுத்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து 28 ஆம் திகதி நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவிலும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இலிங்கநாத பரமேச்சுரப் பெருமானுக்கு நடைபெற்ற 108 சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து, தீர்த்தமாடும் நிகழ்வும் பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாலை நடைபெற்ற கொடியிறக்க நிகழ்வுடன் மௌனோற்சவம், சண்டேஸ்வர உற்சவம் மற்றும் ஆச்சார்ய உற்சவமும் நடைபெற்றன.

29 ஆம் திகதி நடைபெற்ற பூங்காவனத் திருவிழாவில் பார்வதி அம்பாளுக்கும் பரமேச்சுரப் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றதுடன், பின்னர் நடைபெற்ற திருவூஞ்சல் மற்றும் திருவீதியுலா பக்தர்களின் மனங்களை கவர்ந்தது.

மகோற்சவத்தின் நிறைவு நிகழ்வாக நேற்று (29) மாலை நடைபெற்ற வைரவர் திருவிழாவில், வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகமும் மகோற்சவ பூர்த்தி விசேட பூஜைகளும் இடம்பெற்றன. பின்னர் வைரவப் பெருமான் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மகோற்சவத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஆலய நிர்வாகம், தொண்டர்கள் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மகோற்சவத்தின் மூலம் சுவிட்சர்லாந்து வாழ் இந்து மக்களின் ஆன்மீக ஒற்றுமையும் பக்தி உணர்வும் மீண்டும் வெளிப்பட்டதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

© SwissTamilMedia

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button