Swiss Tamilar News

சூரிச் நகரில் ஒலித்த இசைஞானியின் இசை… சவால்களைத் தாண்டி நடந்த ஒரு இசை இரவு

சூரிச் நகரில் ஒலித்த இசைஞானியின் இசை... சவால்களைத் தாண்டி நடந்த ஒரு இசை இரவு

சூரிச் நகரில் ஒலித்த இசைஞானியின் இசை… சவால்களைத் தாண்டி நடந்த ஒரு இசை இரவு

சூரிச் மாநகரில் இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி கடந்த சனிக்கிழமை 27ம் திகதி நடைபெற்றது. இதற்கு முன்பு இரண்டு முறை இளையராஜாவின் மாபெரும் இசைக்கச்சேரி இடம்பெறப்போவதாக அறிவித்து, திகதிகள் அறிவிக்கப்பட்டு, டிக்கெட் விற்பனைகளும் நடைபெற்றிருந்த போதிலும், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டு அல்லது நடைபெறாமல் போனது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கியிருந்தது.

இந்த முறை கூட, கடுமையான வெப்ப அலை மற்றும் சூரிச் சிவன் கோவிலின் தேர்த் திருவிழா போன்ற காரணிகள் நிகழ்ச்சிக்கு சவாலாக அமைந்தன. இருந்தபோதிலும், நிகழ்ச்சி ஒருவழியான நடந்து முடிந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பெரிய அளவிலான கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது ஐரோப்பாவின் பல நாடுகளில் இருப்பதைப் போல எளிதான செயல் அல்ல. இந்நாட்டின் சட்டங்களும் பாதுகாப்பு நடைமுறைகளும் மிகவும் கடுமையானவை. பார்வையாளர்களின் பாதுகாப்பு இங்கு முதன்மையாகக் கருதப்படுவதால், தீயணைப்பு படையினர், மருத்துவ அவசர உதவி சேவைகள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் கட்டாயமாக மேற்கொள்ளப்படுகின்றன.

N1 1

அதேபோல, பல மணிநேரம் இடைவேளையின்றி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் இந்நிகழ்ச்சியிலும் சிறிய இடைவேளை வழங்கப்பட்டது. இது இந்திய இசை நிகழ்ச்சிகளுக்கு பழகியிருந்த இசைக்குழுவினருக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கலாம்.

பார்வையாளர்களின் வருகை எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்பது உண்மை. ஆனால் அதற்கான காரணங்களை வெறும் ஆர்வக் குறைவாக மட்டும் பார்க்க முடியாது. முன்னதாக இரண்டு முறை அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போனதன் காரணமாக, “இந்த முறையும் நடைபெறுமா?” என்ற சந்தேகம் பலரிடமும் இருந்திருக்கலாம்.

இருப்பினும், மேடையில் ஒலித்த இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை என நிகழ்வுக்கு சென்று வந்த ரசிகர்களின் பதிவுகளை வைத்து பார்க்கும்போதே தெரிந்துகொள்ளமுடியும். “ஐனனி ஐனனி” முதல் “தென்பாண்டிச்சீமையிலே” வரை ஒலித்த பாடல்கள் அரங்கில் இருந்த ரசிகர்களை மீண்டும் அவர்களின் நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. பல பாடல்களுக்கு ரசிகர்கள் “ஒன்ஸ்மோர்” கோரி கைகொட்டி ரசித்தது அந்த இசையின் தாக்கத்தை வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சியின் ஒலியமைப்பும் குறிப்பிடத்தக்க அளவில் தரமானதாக இருந்தது. சிலநேரங்களில் இளையராஜாவே ஒலியமைப்பை சரிசெய்யும்படி சொன்னதையும் காணமுடிந்தது. இசைக்கருவிகளின் ஒவ்வொரு நுணுக்கமான ஒலியும் தெளிவாகக் கேட்கும் வகையில் ஒலித்தரத்தை அமைத்திருந்தனர். பலருக்கும் அது ஸ்டுடியோ தர இசை அனுபவத்தை நினைவூட்டியிருக்கலாம்.

இசைஞானி இளையராஜா தனது இயல்பான நகைச்சுவை உணர்வும், நக்கலும், நையாண்டியும் கலந்த உரையாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்தார். வழக்கமான தொகுப்பாளர் இன்றி, தனது இசை அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றது தனித்துவமான அனுபவமாக அமைந்தது.

தமிழர்களின் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் தோல்வியிலும், சிறுவயது முதல் இன்று வரை எங்கோ ஒரு இடத்தில் இளையராஜாவின் இசை துணையாக இருந்திருக்கிறது என்பதை மறுப்பது கடினம். அதனால் அவரது இசையின் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அளவுகடந்த பற்று இயல்பானதே.

ஆனால், அந்த அன்பும் பற்றும் சில நேரங்களில் தேவையற்ற ஒப்பீடுகளுக்கும் வழிவகுக்கிறது. சமூக ஊடகங்களில் சமீபத்தில் இளையராஜாவையும் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபா*கரனையும் ஒப்பிட்டு பதிவுகள் வெளியிடப்பட்டதை காண முடிந்தது. இசை என்பது ஒரு கலைப் பயணம்; ஒரு மக்களின் அரசியல் மற்றும் தேசிய இலட்சியம் என்பது வேறு பரிமாணம் கொண்ட ஒன்று. இரண்டையும் ஒன்றோடொன்று ஒப்பிடுவது தேவையற்ற விவாதங்களையும் சர்ச்சைகளையும் மட்டுமே உருவாக்கும்.

எது எப்படியிருந்தாலும், மக்கள் வருகை குறைவாக இருந்தபோதிலும் நிகழ்ச்சியை நடத்தி முடித்த ஏற்பாட்டாளர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில், “மக்கள் வருகையை விட நிகழ்ச்சியை நடத்தியதே பெரிய சாதனை” என்ற கருத்தும் பலரிடையே பேசப்பட்டதை மறுக்க முடியாது.

இளையராஜா ஒரு தடவை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தையை தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு எதிராக பல ஈழத்தமிழர்கள் கொதித்தெழுந்தார்கள். ஆனால் அவற்றை எல்லாம் மறந்து இன்று இந்த கச்சேரிக்கு இசைக்காக மட்டுமே பலர் சென்றமை அவரின் தனிப்பட்ட விடயங்களை மறந்து அவரின் இசைக்காக மட்டுமே என்பதை காட்டியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க பிரான்சில் யூலை 6ம் திகதி இளையராஜாவின் கச்சேரி இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது கரும்புலிகள் தினம் என்பதால் சமூகவலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புகளுக்கு பின்னர் திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. எனினும் இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக தெரியவில்லை.

இசை என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது நினைவுகள், உணர்வுகள் மற்றும் தலைமுறைகளை இணைக்கும் ஒரு பாலம். இளையராஜா அதை அவர் சரியாகச்நடத்திச்சென்றுள்ளார்.

– சுவிஸ் தமிழ் மீடியா-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button