Swiss Tamilar News
Trending

வானொலி முதல் நாவல் வரை… ஆதிலட்சுமி சிவகுமாரின் சாதனைப் பயணம்!

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தாலும் ஈழத்தை எழுத்தில் சுமக்கும் பெண் ஆளுமை!

ஈழத் திருநாட்டில் எழிலும் கலை கலாச்சாரப் பண்புகளும் சோரம்போகாத தனித்துவமும் நின்று நிலைத்து இற்றைக்கு பலநூறு ஆண்டுகளுக்கு மேலாக அதனை பேணிப் பாதுகாத்து கடத்தப்படுகிறதென்றால் அதன் நெறிமுறை தவறாத வழித் தோன்றலில் வந்த எழுத்தாளர்கள் கலை இலக்கியசார் பேராளர்கள் எனப் பல்துறை சார்ந்த பேராளுமைகளினால்தான் அவ்வகையான கைங்கரியங்கள் கனதியாக ஆவணப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, பாடலாசிரியராக, விமர்சகராக, நூலாசிரியராக, அச்சு, இலத்திரனியல் ஊடக எழுத்தாளராக, மதிப்பீட்டாளராக, தேசிய உணர்வும் மண்வாசனையும் மாறாது நான்கு தசாப்தங்களாக ஈழத்தின் சிறந்த கலை இலக்கிய பேராளுமைகளில் ஒருவரான ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளர் சுவிற்சர்லாந்து வாழ் திருமதி.ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் கலை இலக்கியப் பார்வையோடு இவ்வாரம் இணைவோம்…

தாயகத்தின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தில் சைவமும் தமிழும் கலையும் கலாச்சாரமும் இணைவோடு கல்வியுமாய் ஆலயமணி ஓசைக்குப் பஞ்சமற்ற எழில்மிகு ஊரான இணுவில் பதிதனில் தமிழையே மூச்சாய் வரித்து சைவத்தையே சிறந்த பேச்சாய் நிறுத்தி தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கொள்கையை பரப்பி நின்ற பேச்சாளர், சமூகநல மேம்பாட்டு செயற்பாட்டாளர், தமிழ் நல்லாசான் பண்டிதர் நா.இராசையா இணை சின்னம்மா தம்பதிகளுக்கு அரும்பெரும் புதல்வியாய் பிறந்த ஆதிலட்சுமி சிறு வயது முதலே தாய் தந்தை அன்போடு தமிழன்னையின் அமுதையும் உண்டு தடம் பதித்து நடக்கையிலே மழலைத் தூயதமிழ் குடிலெங்கும் பரவி நின்றதற்கு இவர் உலகெங்கும் பரப்பி நிற்கும் தமிழ் நற்சான்று.

“சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தாலும் ஈழத்தை எழுத்தில் சுமக்கும் பெண் ஆளுமை!”

இவர் தனது கல்விக் காலத்தை யா/இணுவில் சைவப்பிரகாசா வித்தியாசாலையிலும் (இணுவில் இந்துக் கல்லூரி), யா/கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். மேற்படிப்பை தொழில்நுட்பக் கல்லூரியிலும் ஊடகக் கல்வியை தமிழீழ ஊடகவியற் கல்லூரியிலும் கற்ற இவர் தன் இளமைக் காலங்களிலேயே பாண்டித்தியத்தையும் தமிழ்மொழி மீதான பற்றுறுதியையும் தந்தையினால் முறைப்படி கடத்த அதை அப்படியே மகளுக்குக் கிடைத்த முதுசமாய் பெற்றுக் கொண்டார்.

“வளரும் பயிரை முளையிலே தெரியும்” என்ற முதுமொழிக்கமைவாய் முளைத்துப் பெரு விருட்சமாகி இலக்கியப் பேருலகில் பெரு நிழல் பரப்பி நிற்கிறது இப் பேராளுமை. குடும்பம் வாழ் நல் சூழலில் மகிழ்வுமிகு வாழ்வியல் முறையில் இருந்துகொண்டே கலை இலக்கியத் துறையில் தடம் பதித்த மூத்த பெண் படைப்பாளர் ஆதிலட்சுமி பாடசாலை நிகழ்வுகள், சமயம்சார் நிகழ்வுகள் அனைத்திலும் இளமைக்கால ஆளுமையை பதித்து நின்றார். தாய் தந்தையின் பேராசியோடும் மூத்தோர் பெரியோர் நண்பர்களின் வாழ்த்துப் பலத்தோடும் படைப்பாற்றலில் வீச்சுப் பெற்ற இவர் 1982ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி “உரிமையில்லா உறவுகள்” என்ற முதற் சிறுகதை தினகரன் பத்திரிகையில் வெளிவந்தபோது இலக்கிய உலகிற்கு ஆதிலட்சுமி இராசையாவாக தடம் பதித்தார்.

“சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தாலும் ஈழத்தை எழுத்தில் சுமக்கும் பெண் ஆளுமை!”

அன்று முதல் இன்றுவரை கதை எழுதும் பாங்கினிலே தனித்துவமும் வாசிப்போரை ஈர்க்கும் பக்குவமும் கற்பனைகளற்ற மண்வாசனை, உணர்வுகள் கலந்த மொழி ஆளுமையை தன் உள்ளத்திலிருந்து இலக்கிய உலகிற்கும் வாசகர்கள் தேடலிற்கும் படைத்து நிற்கும் விதம் அபூர்வமானது. இவர் தனது மொழியாற்றல், படைப்பாளுமையில் எப்போதும் வறுமை நிலையைக் காட்டியதில்லை. ஏனெனில் தமிழ் உணர்வின் பாண்டித்தியமும் பட்டறிவும் இவர் படைப்புகளில் புலப்பட்டு நிற்கிறது. இவரது உடன்பிறப்பான கனடா வாழ் எழுத்தாளர் இரா.சம்பந்தன் அவர்களும் இலக்கியப் பரப்பில் தடம்பதித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கவிதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், நூல் விமர்சனங்கள், படைப்பாளர்கள் பலரின் நூலுக்கான அணிந்துரைகள், வாழ்த்துரைகள், பாடல் வரியாக்கம், இலக்கியப் பயிற்சி வகுப்புகள், கலை இலக்கிய போட்டிகளில் மதிப்பீட்டாளர், அரங்க உரை ஆற்றுகை, கவியரங்கங்கள் என தனக்கென ஒரு முத்திரை பதித்து நேர்த்திய களங்கமற்ற கொள்கை உணர்வுடன் பயணித்து வரும் உணர்வுமிகு மூத்த பெண் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் தன் கல்விக் காலங்கள் கடந்து இளமைக் காலங்கள் துறந்து முழுநேர தேசிய உணர்வுமிகு நற் கரத்தை துணைக்கரமாய் ஏற்று வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் கலை இலக்கிய பாதை வழியே ஆதிலட்சுமி சிவகுமார் என்ற நாமத்தோடு ஆளுமைத் திறனால் வலம்வரத் தொடங்கினார்.

604535307 857745003888242 90828995571346576 n

தியாகம் சூழ் வாழ்வியல் முறை, அர்ப்பணிப்பு நிறைந்த மனங்கள், இனம்வாழத் தம்மையே ஈகம் செய்யும் ஒப்பற்ற சாதனைப் பயணம், பெண்ணுரிமைக்கான உரத்த குரல்கள், பெண்ணிய சமத்துவம், அவர்தம் ஆற்றலுக்கு முதற்களம், வலி நிறைந்த வாழ்வியல் முறை அதற்குள் எழுதவும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் உயிரோட்ட எழுத்துகளுக்குத் தனித்துவம் இருந்தது. அதற்குள்தான் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் சிந்தனை ஆற்றலும் பதிவாக்கம் பெறுகின்றது.

“விழிமடல் மூடி துயில்கின்ற வீரரே…” என தொடங்கு தன் பாடல் வரிகளினால் தமிழன்னை கட்டியணைத்து துயில்கொள்ள வைத்திருக்கும் அந்த உன்னத மானமாவீரர்களை தன் உள்ளத்து உணர்வால் வரியாக்கி காற்றலையில் பாட்டாக பதிவாக்கினார். அதனைத் தொடர்ந்து கீழ்வரும் பாடல் வரிகள், இறுவெட்டுகளிலும் தன் உணர்வுகளை பதிவாக்கினார்.
* வானம் தொடும் தூரம்
* கடல்வீரர்கள் பாகம் 7
* தேசத்தின் புயல்கள் பாகம் 4
* ⁠புலிகளின் குரல் வெளியீடான உதயம்
என பல இறுவெட்டுகளிலும்
* காலை மலரை கைகளில் ஏந்தி…
* ⁠புதுயுகம் ஒன்று படைத்திட வேண்டும்…
* ⁠ஈழம் மலரம் போகுது…
* ⁠விழிமடல் மூடி துயில்கின்ற வீரர்…
* கீதம் இசைத்த குயில் இவர் கீழ்வானம் எழுந்த கதிர்…
என 15 தாயக எழுச்சிப் பாடல்களை எழுதியுள்ளார்.

இவரது வரியின் கனதியையும் காத்திரத்தையும் காற்றலை இன்றும் காவிச் சென்று காதோரம் சேர்க்கிறதென்றால் இவர் படைப்பாற்றலின் ஆளுமை அவ்வளவு வீரியத் திறன் கொண்டிருக்கிறது.

1990களில் தாயக புலிகளின் குரல் வானொலியில் முதல் பணியாளராக இணைந்து கொண்டார். இதனை “வானோசை 13” நூல் ஆதாரமாக பதிவு செய்திருக்கிறது.
1990ஆம் ஆண்டு முதல் 2009 வரை வானொலிக்கு எண்ணற்ற படைப்புகளை எழுதியுள்ள மூத்த பெண் படைப்பாளர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் தாயக உணர்வு சுமந்து இலட்சியக் கனவை வரித்து கவிதையாக, சிறுகதையாக, நாடகமாக, கட்டுரையாக, கணப்பொழுது எனும் சிறப்பு நிகழ்வாக என மேலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள், தொடர் நாடகங்கள் என ஏராளமான கலைப் படைப்புகளையும் நிகழ்ச்சிப் பிரதிகள் எழுதுவது, நிகழ்ச்சி அமைப்பு, நிகழ்ச்சித் தணிக்கை, நிகழ்ச்சிகளின் மதிப்பீடு என பல வகைப் பணிகளை ஆற்றிய அசாத்திய திறன் கொண்ட பெண் ஆளுமை ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள்.

நிதர்சனம், தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பவற்றிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவரது எழுத்துலகப் பணியின் மற்றுமொரு பரிணாமமாக மனிதர்கள், வலி, இலவம்பஞ்சு, உண்மை, வேலி போன்ற சிறுகதைகள் குறும்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதை சான்றாக காணலாம். எழுதுவதென்பதும் படைப்புகளை படைப்பதென்பதும் எல்லோராலும் ஓரளவு இயலுமானதாக இருந்தாலும் காலத்தால் நிலைத்திருக்கக் கூடிய இனம், மொழி சார்ந்த படைப்புகள் சமூக விரும்பிகளால் பேணப்பட்டு பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கடத்தப்படும்.

அவ்வாறான படைப்பையே ஈழத்து மூத்த பெண் படைப்பாளி ஆதிலட்சுமி் சிவகுமார் அவர்கள் படைத்திருக்கிறார் என்பதற்கு இவரது பல படைப்புகள் சான்று பகிர்ந்து நிற்கிறது.
இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், ஈழமுரசு, சிரித்திரன், சுட்டும்விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்திரா போன்ற பத்திரிகைகளிலும் ஜீவநதி சஞ்சிகையிலும் இணையத் தளங்களிலும் வெளியாகியுள்ளன. சம காலத்திலும் இதில் சிலவற்றில் படைப்புகளை படைத்துக்கொண்டிருக்கிறார்.

இவரது கவிதை சுவிற்சர்லாந்து ஜெர்மன் மொழிச் சஞ்சிகையின் 30ஆம் ஆண்டு சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.
இதுவரை இவர் வெளியிட்ட நூல்களும் வெளியீடு நடைபெற்ற நாடுகளும்…
* புயலை எதிர்க்கும் பூக்கள் – சிறுகதைத் தொகுப்பு – 1990
* ⁠என் கவிதை – கவிதைத் தொகுப்பு – 2000
* ⁠மனிதர்கள் – சிறுகதைத் தொகுப்பு – 2006
* ⁠புள்ளி கரைந்த பொழுது – நாவல் – 2018 – தாயகம், சுவிற்சர்லாந்து, கனடா, இலண்டன், டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ்
* ⁠பொன்வண்டு – சிறுகதைத் தொகுப்பு – 2022 – சுவிற்சர்லாந்து, தாயகம், கனடா, பிரான்ஸ்
* ⁠ஒற்றை வானமும் ஒரு பறவையும் – கவிதை – 2023
* ⁠முட்காட்டுப் பூ – நாவல் – 2025 – சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ்
* ⁠காலம் வனைந்த கனையங்கள் –
இவ்வாறாக எட்டு நூல்களை இலக்கிய உலகிற்குத் தந்த ஆளுமை மிகுந்த எழுத்தாளரின் சொல்லாண்மையும் இளையோடும் விடயப் பரப்பும் ஒர் இனம் சார்ந்த ஏக்கங்களை, தொட்டுவிட வேண்டிய இலக்குகளை, வரலாற்றின் தனித்துவங்களை வாசகர்களுக்கு உரிமை கலந்த உணர்வோடு அனுபவ ரீதியாக படைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

“என்கவிதை” நூலினை தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம் வெளியீடு செய்ய போராளி ஓவியர் ஒலிவர் அட்டைப்படத்தை வரைந்துள்ளார். இந்நூலுக்கான பின்னட்டைக் குறிப்பு, வாழ்த்துரையினை ஈழத்தின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வழங்கியுள்ளார். பின்னட்டைக் குறிப்பில்..
“என் கவிதை”
ஆதிலட்சுமியின் அழகான ஆவணம்
பாதிராட்சியத்திற்கான வாக்குமூலம்
நீதிக்கான போருக்காக முழங்கும்
நியாய முரசு
அடக்கு முறைக்கான அனைத்தின் மீதும் ஆதிலட்சுமியின் கவிதை அமிலம் தெளிக்கிறது விடுதலையின் சிறகுகள் மீது “ஆதியக்கா” அழகுவர்ணம் பூசியுள்ளார். ஒப்பனைகள் ஏதுமற்றிருப்பினும் மின்னலடித்துப் போகின்றன கவிதைகள் மெல்லிய கோபத்துடன்தான் எல்லாமும் முற்றம் வருகின்றன. தாளலயத்திற்கு மேளம் தட்டாது “காலம் சுமந்து” நிற்கிறது ஆதியின் கவிதை என ஆஸ்தான கவிஞரின் ஆசிப்பெருக்கு பெண்ணாளுமை ஆதிலட்சுமி சிவகுமாரை பற்றுறுதியோடு பயணிக்க வைக்கிறது.

“ஒற்றைவானமும் ஒருபறவையும்” கவிதை நூல் சுவிற்சர்லாந்து தமிழர்களறி ஆவணக்காப்பகம் வெளியீடு செய்ய பரணீ அச்சகம் அச்சுப்பதித்துள்ளது. நூலின் அட்டைப்பட வடிவமைப்பை ஓவியர் மணிவண்ணன் வடிவமைத்துள்ளார். பதிப்புரையை தமிழர்களறி தில்லைம்பலம் சிவகீர்த்தி, அணிந்துரையை முனைவர் ச. மனோன்மணி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இன்நூலின் படையலினை “மிளிரும் மெய்ச் சுடர்களுக்கு” என ஒற்றைவரியில் ஓராயிரம் ஆத்மாத்களை மெய்ப்பித்து நிக்கிறார் இந் நூலாசிரியர். இந்நூலில் “கவிதையாய் வருகிறேன்” என்ற தலைப்பு தொடக்கம் “கனவுகளுடன் வாழ்பவள் நான்” எனும் தலைப்பு வரை 75 குறும் தலைப்புகளில் பேசப்பட வேண்டிய எழுதப்பட வேண்டிய எண்ணற்ற விடயப் பரப்புகளை தன் எழுத்தாற்றலினால் பதிவு செய்திருக்கிறார் மூத்த பெண் எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள்.

2025 இல் வெளியான இவரது “முட்காட்டுப் பூ” நாவலானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளின் பிரிவு தரும் கொடூர வலியை அனுபவரீதியான தாயாக வெளிப்படுத்தி கொட்டித் தீர்த்திருக்கிறார் இந் நூலாசிரியர். ஒவ்வொரு தாய்மார்களுக்கும் பிள்ளைகள் மீது இருக்கின்ற தம் பாசமும் அதை இழந்தபோது வருகின்ற பிரிவுத் துயரும் இவரது எழுத்துகளில் நிறைந்திருக்கிறத. இந்நாவலை சுவிற்சர்லாந்து தமிழர்களறி ஆவணக்காப்பகம் வெளியீடு செய்ய பரணி அச்சகம் அச்சுப்பதித்துள்ளது.

அட்டைப்பட வடிவமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவியர் மணிவண்ணன் வடிவமைத்துள்ளார். வெளியீட்டுரை தமிழர்களறி தில்லையம்பலம் சிவகீர்த்தி அவர்களும் உரைகளை பூரணி பரராஜசிங்கம் அவர்களும் வழங்கியுள்ளனர். தீபிகா, பிறேமினி அற்புதராசா, கந்தர்மடம் அ.அஜந்தன் ஆகியோரின் கருத்துப் பதிப்போடு “கருவறையில் கனல் சுமக்கு தாய்மாருக்கு” என்ற படையலோடு இந் நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலின் பின்னட்டைக் குறிப்பை நூலாசிரியர் இப்படிப் பதிகிறார்…

“இந்நாவலை எழுதும் போது என் விரல்கள் நடுங்கியிருக்கின்றன. மனதுக்குள் குருதி கசிந்திருக்கிறது. உறக்கம் தொலைந்திருக்கிறது. பசி மறந்திருக்கிறது. என்னை மிகவும் வருத்தியே இந் நாவலை படைத்திருக்கிறேன். இந்தப் படையலுக்கு என்னை தயாராக்கிக் கொள்ள நீண்ட காலம் எடுத்திருக்கிறது. காலம் ஒவ்வொரு தடவையும் என்னை அச்சுறுத்த முனையும் போதெல்லாம் என் படைப்புகளோடு நான் நிமிர்ந்து
கொள்கிறேன். என்பதுதான் உண்மை”.

நூலாசிரியரின் இவ் வலி நிறைந்த படைப்பை படிக்கின்ற போது வெறும் வாசிப்போடு மட்டும் நின்றுவிடாது அதற்குள் வாழத்தூண்டுகின்றபோது வருகின்ற வலியை இந்த நூலைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் பரிபூரணமாக உணர்வார்கள். இது வெறும் நாவலல்ல இது ஈழத்தில் வாழும் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களின் நாளாந்த வாழ்வியல் வலி.
2008ஆம் ஆண்டு தை மாத எரிமலை சஞ்சிகையில் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களின் நேர்காணல் பதிவாக்கம் பெற்றிருக்குறது. அதில் “காலத்தின் பதிவுகளை காவிச் செல்லும் படைப்புகள் உருவாக வேண்டும்” இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள்.

“சுவிற்சர்லாந்தில் வாழ்ந்தாலும் ஈழத்தை எழுத்தில் சுமக்கும் பெண் ஆளுமை!”

இவரது “புள்ளி கரைந்த பொழுது” நாவல் பற்றிய எனது பார்வையினை “மித்திரன்” வாரமலரில் மூன்று வாரங்கள் தொடராக எழுதியிருந்தேன்.
கடந்த 10.03.2024 தாயகத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகை “ஆளுமைச் சிறப்பிதழ்” என்ற தலைப்பில் இவரது ஆற்றலகளைப் பதிந்திருக்கிறது. அதில் தாமரைச்செல்வி, சி.ரமேஸ், தாட்சாயணி, கந்தர்மடம் அ.அஜந்தன், ரி.செல்வமனோகரன், புலோலியூர் வேல் நந்தகுமார், தமிழ்நதி, ஆ.ஜேசுராசா, முல்லைக் கமல், கலாநிதி குலமோகன், பிறேமினி அற்புதராசா, பூரணி பரராஜசிங்கம், உலகமங்கை ஆகியோர் இவர் பற்றிய ஆளுமைப் பயணங்களை பதிவு செய்துள்ளனர்.

இவ் எழுத்தாளரது கடந்த காலப் பயணங்களில்…
* தேசிய இளைஞர்சேவை மன்ற சிறுகதைப் போட்டியில் 02ஆம் பரிசு – 1982
* சிரித்திரன் மகளிர் கட்டுரைப்போட்டியில் பரிசு 1991
* ⁠தமிழீழ மகளிர் வெளியீட்டுப் பிரிவு கவிதைப் போட்டி 02ஆம் பரிசு – 1993
* ⁠கப்டன் வானதி பதிப்பகம் “மூத்தபெண் படைப்பாளர்” விருது – 2004
* ⁠தேசத்தலைவரினால் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்பு – 1998 இதனையே தன் வாழ்நாளில் பெரும் பேறாகவும் தன்பயணங்களின் நம்பிக்கையாகவும் கருதும் இவ் எழுத்தாளர் அதன் மகிழ்வோடே வாழ்கிறார்.

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளுமை ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக கலை இலக்கிய நெறிமுறையோடு நின்று மொழிச்சிதைவற்று சொற் பிசறுகளின்றி படைக்கின்ற போருக்கு முந்திய, போர்க்கால, போருக்கு பிந்திய பதிவுகள் ஆவணமாக பேணப்படுவதோடு மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கான படிப்பாவணமாகவும் பேணப்படவேண்டியதே. இவ் ஆளுமையை கலை இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளர்கள் சார்பாக வாழ்த்தி மகிழ்ந்தேற்றுவோமாக.

இந்த ஆளுமையினை எமக்கு காணொளி வடிவில் உருவாக்க பிரத்தியேகமாக வழங்கிய உரும்பையூர் திரு: து.திலக்(கிரி) அவர்களுக்கு நன்றிகள்.

நன்றி :- து.திலக்(கிரி),

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button