மொபைல் சேவை மாற்றம் குறைந்து, வாடிக்கையாளர் நம்பிக்கை உயர்வு சுவிட்சர்லாந்தில் மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை அடிக்கடி மாற்றும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது கணிசமாக குறைந்துள்ளது. கடுமையான போட்டி நிலவிய 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் சேவையை மாற்றியிருந்த நிலையில், இப்போது சந்தை நிலைமை சீராகி வருவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. bonus.ch வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. அதன்படி, 54 சதவீத மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அதே மொபைல் சேவை வழங்குநருடன் தொடர்கிறார்கள். இது தொலைத்தொடர்பு சந்தையில் நிலைத்தன்மை அதிகரித்திருப்பதை காட்டுகிறது. முன்னதாக அதிகமாக சேவை மாற்றம் செய்த இளைஞர்களிடமும் தற்போது மாற்றம் குறைந்துள்ளது. 30 வயதுக்குட்பட்டவர்களில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வெறும் 30 சதவீதம் பேர் மட்டுமே சேவை வழங்குநரை மாற்றியுள்ளனர். இது முந்தைய ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். வாடிக்கையாளர்கள் சேவையை மாற்றுவதற்கான முக்கிய காரணமாக இன்னும் விலைதான் உள்ளது. தற்போது கிட்டத்தட்ட பாதி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 40 சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு குறைவாகவே செலுத்துகின்றனர். அதே நேரத்தில், சேவை தரம் மற்றும் பயனர் திருப்தி அளவுகள் வரலாற்றிலேயே உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. ஆனால், இந்த நிலை நீடிக்கும் என்ற உறுதி இல்லை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, Swisscom நிறுவனம் தனது கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், ஒப்பந்தத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் சட்டத்தின் கீழ் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மலிவான அல்லது சிறந்த சேவைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதனால், வரும் காலங்களில் மீண்டும் மொபைல் சேவை மாற்றம் அதிகரிக்கும் புதிய அலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. © WRS