சொலுத்தூர்ன் சாலைகளில் உயிரிழப்பு குறைந்தது, ஆனால் விபத்துகள் அதிகரிப்பு சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் கன்டோனில் 2025 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவாகும். 2024 ஆம் ஆண்டில் 14 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த ஆண்டு உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் இதே நேரத்தில், மொத்த விபத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 1618 விபத்துகள் பதிவாகி, இது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் ஆறு சதவீதம் அதிகமாகும். இந்த விவரங்கள் Kantonspolizei Solothurn வெளியிட்ட சமீபத்திய போக்குவரத்து புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 101 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். இந்த விபத்து எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, லூட்டர்பாக் மற்றும் ஹெர்கிங்கன் இடையிலான A1 அதிவேக நெடுஞ்சாலையின் ஆறு பாதை விரிவாக்கப் பணிகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக லூட்டர்பாக் முதல் வங்கன் ஆன் டெர் ஆரே (Bern) வரை உள்ள கட்டுமானப் பகுதியில், மே முதல் டிசம்பர் வரை விபத்துகள் 59 இலிருந்து 103 ஆக இரட்டிப்பு ஆகியுள்ளன. சாலைகள் குறுகியதாக மாற்றப்பட்டதால், பாதை மாற்றம் மற்றும் முந்திச் செல்லும் முயற்சிகளில் ஏற்பட்ட மோதல்கள் அதிகமாக இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது. விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள் 2025 இலும் மாறாமல் தொடர்கின்றன. ஓட்டுநர் தவறுகள் 21 சதவீதம், முன்னுரிமை விதிமுறைகளை மீறுதல் 17 சதவீதம், கவனக்குறைவு 16 சதவீதம் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதனுடன், மதுபானம் அருந்திய நிலையில் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் 141 ஆக உயர்ந்துள்ளன. காவல்துறையின் விளக்கப்படி, சில காலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாலும் இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம். காரணம், அந்த நேரத்தில் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக மனிதவளத்தை மாற்றியமைத்திருந்தனர். இருந்தபோதிலும், 560 பேர் ஓட்டுநர் தகுதி இழந்த நிலையில் வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வேக மீறல் தொடர்பாக மொத்தம் 2,38,668 குற்றச்செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், மிக அதிக வேகத்தில் ஓட்டும் ‘ரேசர்’ குற்றங்கள் 13 இலிருந்து 8 ஆக குறைந்துள்ளன. கடந்த ஆண்டு முழுவதும் மொபைல் மற்றும் அரைநிலையான வேக கண்காணிப்பு கருவிகள் மற்றும் லேசர் கருவிகள் மூலம் 1453 வேக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், ஓன்சிங்கன் பகுதியில் அமைந்துள்ள புதிய கனரக வாகன கண்காணிப்பு மையத்தில் 3677 சரக்கு வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 262 வாகனங்கள் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்றதாகும். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மொத்தம் 571 வாகனங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.