ஆர்காவ் A1 நெடுஞ்சாலையில் வேகக் கண்காணிப்பு, 8 ஓட்டுநர்களுக்கு உரிமம் பறிமுதல்
ஆர்காவ் A1 நெடுஞ்சாலையில் வேகக் கண்காணிப்பு, 8 ஓட்டுநர்களுக்கு உரிமம் பறிமுதல் அபாயம்
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் கன்டோனில் உள்ள A1 நெடுஞ்சாலையில் நடைபெற்ற இரவுநேர வேகக் கண்காணிப்பில், எட்டு கார் ஓட்டுநர்கள் அளவுக்கு மீறி வேகமாக சென்றதால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மிக அதிக வேகத்தில் சென்ற ஒருவருக்கு கடுமையான மதுபோதையும் இருந்தது.
ஆர்காவ் கன்டோன் போலீசார், டிசம்பர் 13, 2025 சனிக்கிழமை அதிகாலை, பிர்மென்ஸ்டார்ஃப் பகுதியில் உள்ள A1 நெடுஞ்சாலையில் ரேடார் கருவி மூலம் வேகக் கண்காணிப்பு மேற்கொண்டனர். இந்த சாலைப்பகுதியில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணிக்கு பின்னர், பெர்ன் திசையில் சென்ற ஒரு Audi காரை ரேடார் கருவி, மணிக்கு 173 கிலோமீட்டர் வேகத்தில் பதிவு செய்தது. உடனடியாக தகவல் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் படை வாகன உரிமையாளரின் லென்ஸ்பர்க் மாவட்டத்தில் உள்ள இல்லத்திற்குச் சென்றது. அங்கு, 31 வயதுடைய அந்த நபர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும், ஆரம்பத்தில் தான் வண்டி ஓட்டவில்லை என மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அளவீட்டு புகைப்படம் காட்டப்பட்டபின், அவர் வண்டி ஓட்டியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமம் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

அதே இரவில், மணிக்கு 159 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற 21 வயதுடைய ஒருவரும், 155 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற 20 வயதுடைய ஒருவரும் போலீசாரால் கண்டறியப்பட்டனர். இவர்களுடைய ஓட்டுநர் உரிமங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.
மூன்று மணி நேரத்தில் அந்த இடத்தை கடந்து சென்ற 2,100க்கும் மேற்பட்ட வாகனங்களில், 342 வேக மீறல் சம்பவங்களை ஆர்காவ் கன்டோன் போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில், மேற்கண்ட மூவரையும் உட்பட 14 ஓட்டுநர்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட உள்ளனர். குறைந்த அளவிலான வேக மீறல்களுக்கு 328 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், எட்டு ஓட்டுநர்களுக்கு சாலை போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.






