Schwyz கன்டோனில் ரிமோட் மோசடி: 5 லட்சம் ஃப்ராங்க் பறிப்பு, போலீசார் கடும் எச்சரிக்கை
Schwyz கன்டோனில் ரிமோட் மோசடி: 5 லட்சம் ஃப்ராங்க் பறிப்பு, போலீசார் கடும் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் Schwyz கன்டோனில் கடந்த வாரம் இடம்பெற்ற தனிப்பட்ட ஒரு சம்பவத்தில், தொலைநிலை அணுகல் முறையை பயன்படுத்திய மோசடி கும்பல் சுமார் 500,000 சுவிஸ் ஃப்ராங்குகளை பறித்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய சுவிட்சர்லாந்து போலீஸ் அமைப்புகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த மோசடி முறையில் குற்றவாளிகள் முதலில் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களை வங்கி ஊழியர்கள் என அறிமுகப்படுத்துகின்றனர். உங்கள் கணக்கில் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளது அல்லது உங்கள் இ-பேங்கிங் கணக்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என கூறி பயமுறுத்துகின்றனர். பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்ற பெயரில், கணினியில் ஒரு “வைரஸ் ஸ்கேன்” மென்பொருள் பதிவிறக்கம் செய்யுமாறு கோருகின்றனர்.
ஆனால் அந்த மென்பொருள் உண்மையில் தொலைநிலை அணுகல் (Remote Access) செயலி ஆகும். அதை நிறுவியவுடன் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களின் கணினி மற்றும் இ-பேங்கிங் கணக்குகளுக்கு நேரடி அணுகலைப் பெறுகின்றனர். பின்னர், பாதிக்கப்பட்டவர்களை இ-பேங்கிங்கில் உள்நுழையச் சொல்லி, அதே நேரத்தில் அவர்களை தொலைபேசியில் பேசிக் கவனச்சிதறச் செய்கின்றனர். சில சம்பவங்களில், இரு-அங்கீகார பாதுகாப்பை (Two-Fact-verification) தவிர்க்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் கைப்பேசிகளிலும் செயலிகளை நிறுவியதாக தெரியவந்துள்ளது.

உள்நுழைந்ததும், பாதிக்கப்பட்டவர்களின் கணினித் திரை இருண்டுபோய் பல்வேறு செய்திகளால் மறைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் குற்றவாளிகள் வங்கி கணக்குகளில் உள்ள தொகையை பெரும்பாலும் முழுமையாகவே மாற்றி விடுகின்றனர். இவ்வாறு பறிக்கப்பட்ட பணம் பெரும்பாலும் சுவிஸ் வங்கி கணக்குகளுக்கே மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களில், வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் மென்பொருள் நிறுவுமாறு கேட்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுகமற்ற நபர்களின் அறிவுறுத்தலின் பேரில் எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டாம். உங்கள் இ-பேங்கிங் உள்நுழைவு தகவல்கள், கடவுச்சொற்கள் அல்லது குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனே அழைப்பை நிறுத்தி, உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தொடர்புகொள்ள வேண்டும். மோசடி சந்தேகம் ஏற்பட்டவுடன் உடனடியாக போலீசில் புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





