வலைஸ் கன்டோனில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை பனிவீழ்ச்சி; பனிச்சரிவு அபாயம் அதிகரிப்பு
வலைஸ் கன்டோனில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை பனிவீழ்ச்சி; பனிச்சரிவு அபாயம் அதிகரிப்பு
வலைஸ் (Valais) கன்டோனின் மலைப்பகுதிகளில் கடந்த வாரம் பதிவான கடும் பனிவீழ்ச்சி புதிய சாதனையை எட்டியுள்ளது. கடல்மட்டத்திலிருந்து 1,720 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லா கிரூசாஸ் (La Creusaz) வானிலை நிலையத்தில் வெள்ளிக்கிழமை 235 சென்டிமீட்டர் பனித்தட்டு அளவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 37 ஆண்டுகளில் பிப்ரவரி 20ஆம் தேதி இவ்வளவு அதிக பனிவீழ்ச்சி பதிவாகாததாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல்கள்“சுவிட்சர்லாந்து இயற்கை அபாயங்கள் சங்கம் (Association suisse des risques naturels)” என்ற அமைப்பின் சமூக ஊடகப் பதிவின் மூலம் வெளியாகியுள்ளன. தன்னார்வலர்களால் நிர்வகிக்கப்படும் இந்தத் தளம்,“பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் (Institut für Schnee- und Lawinenforschung)” (SLF) சேகரித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தகவல்களை வெளியிடுகிறது.
கடந்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு அளவீட்டு நிலையங்களிலும், குறிப்பாக வலைஸ் கன்டோனில், சாதனை அளவுகள் பதிவாகியுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாரம் பெய்த கடும் மழை மற்றும் பனிவீழ்ச்சி, ஸ்கீயிங் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பாதுகாப்பு சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது.

மொன்டானா (Montana, VS) அளவீட்டு நிலையத்தில் 1,590 மீட்டர் உயரத்தில் வெள்ளிக்கிழமை 177 சென்டிமீட்டர் பனித்தட்டு பதிவாகியுள்ளது. இது அங்குள்ள சாதனை அளவிற்கு மிக அருகில் உள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் 134 சென்டிமீட்டர் புதிய பனி பெய்துள்ளது.
புதிய பனிவீழ்ச்சியுடன், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பனிச்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது. வலைஸ் கன்டோனில் முழு வாரமும் அபாய நிலை உயர்வாக இருந்து, சில பகுதிகளில் அதிகபட்சமான ஐந்தாம் நிலை எச்சரிக்கையும் இடைக்கிடையாக அறிவிக்கப்பட்டது.
சால்வான் (Salvan) பிராந்தியத்திலும், குறிப்பாக லா கிரூசாஸ் மற்றும் லே மரெகோட் (Les Marécottes) ஸ்கீப் பகுதியிலும் கடுமையான தாக்கம் காணப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் சில நேரங்களில் ஸ்கீப் பாதைகள் மூடப்பட்டன. க்ரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதிகளிலும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மலைப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மற்றும் குளிர்கால விளையாட்டு ஆர்வலர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.





