ஜூரா கன்டோனில் வெளிநாட்டவர்களுக்கு நீச்சல் குள கட்டணம் இரட்டிப்பு
ஜூரா கன்டோனில் வெளிநாட்டவர்களுக்கு நீச்சல் குள கட்டணம் இரட்டிப்பு

ஜூரா கன்டோனில் வெளிநாட்டவர்களுக்கு நீச்சல் குள கட்டணம் இரட்டிப்பு
சுவிட்சர்லாந்தின் ஜூரா கன்டோனில் உள்ள போரன்த்ருய் (Porrentruy) நகராட்சி, சுவிட்சர்லாந்தில் வசிக்காத அல்லது வேலை செய்யாத வெளிநாட்டவர்களிடம் நகராட்சி நீச்சல் குளத்தை பயன்படுத்த இரட்டிப்பு கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளது.
2025 கோடைக்காலத்தில், அருகிலுள்ள பிரான்ஸ் எல்லைப் பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டவர்களுக்கு நகராட்சி நீச்சல் குள நுழைவு தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.
அப்போது, உள்ளூர் மக்கள் சில பிரெஞ்சு இளைஞர்கள் பெண்களை தொந்தரவு செய்தல், ஒழுங்கற்ற மொழிப் பயன்படுத்தல், பொருத்தமற்ற உடையுடன் நீந்துதல் மற்றும் எச்சரிக்கப்பட்ட பின்னரும் வன்முறையாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், 2026 கோடைக்காலத்திற்காக புதிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுவிட்சர்லாந்தில் வசிக்காத அல்லது வேலை செய்யாதவர்கள் மற்றும் பிரான்ஸிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நீச்சல் குளத்திற்குள் நுழைய பெரியவர்கள் 15 சுவிஸ் பிராங்கும், இளைஞர்கள் 10 சுவிஸ் பிராங்கும் செலுத்த வேண்டும்.
முன்னதாக இந்த கட்டணம் பெரியவர்களுக்கு 7.50 பிராங்கும், இளைஞர்களுக்கு 5 பிராங்குமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை பேண தேவையான நடவடிக்கை என ஆதரிக்க, மற்றவர்கள் இது வெளிநாட்டவர்களை தனியே குறிவைக்கும் நடவடிக்கை என விமர்சித்து வருகின்றனர்.






