அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி முன்மொழிவு! – சில அம்சங்களை முறைப்படி எதிர்ப்போம் எனச் சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலன் (Guy Parmelin) அறிவிப்பு.

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிக்க முன்மொழிந்துள்ள நிலையில், இந்த அறிக்கையில் உள்ள சில தவறான அம்சங்களைச் சுவிட்சர்லாந்து முறைப்படி எதிர்க்கும் எனச் சுவிஸ் ஜனாதிபதியும் பொருளாதார அமைச்சருமான கை பார்மலன் (Guy Parmelin) தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கச் சுவிட்சர்லாந்திற்குச் சுமார் 30 நாட்கள் அவகாசம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இப்புதிய வரி விகிதம் முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட 15 சதவீத உச்ச வரம்புக்குள்ளேயே இருப்பதாகத் தெரிவித்தார்.
தற்போது சுவிட்சர்லாந்து 12.5 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் 10 சதவீதமும் வரி செலுத்தி வரும் நிலையில், புதிய வரியால் அனைத்து நாடுகளும் ஒரே நிலையை எட்டும் என அவர் விளக்கமளித்தார்.
இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை 2027-ஆம் ஆண்டிலும் தொடரும் என்பதால், தனக்குப் பின் பதவியேற்கும் அடுத்த அமைச்சரும் இதனைக் கையாள வேண்டியிருக்கும் என பார்மலன் குறிப்பிட்டார்.
இதனிடையே, இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி எனக் கண்டித்துள்ள சீனா, தேவையான எதிர் நடவடிக்கை எடுக்கும் உரிமை தனக்கு உண்டு என எச்சரித்துள்ளதுடன், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டைச் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டவட்டமாக மறுத்துள்ளன.



