சுவிஸ் ஜோடிக்கு ரத்தான விமானக் கட்டணம் திரும்ப வழங்க மறுப்பு! – ஆவணப் பற்றாக்குறையால் மாற்று விமானத்தில் ஏற முடியாததால் ‘No-Show’ எனப் பதிவு செய்த ஈசிஜெட் (EasyJet).

ஸ்பெயினின் மயோர்கா (Majorca) தீவில் விமானம் ரத்தானதால் சிக்கித் தவித்த சுவிஸ் ஜோடிக்கு, மாற்றுப் பயணத்திற்காகச் செலவிட்ட தொகையைத் திரும்ப வழங்க ஈசிஜெட் (EasyJet) நிறுவனம் மறுத்துவிட்டது.
கடந்த ஆகஸ்ட்டில் பால்மாவிலிருந்து (Palma) பாசல் (Basel) வரவிருந்த ஈசிஜெட் விமானம் ரத்தானதைத் தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் சுவிட்சர்லாந்து திரும்ப லண்டன் காட்விக் (Gatwick) வழியாகச் செல்லும் விமானமே ஒரே வழியாக இருந்துள்ளது.
ஆனால், அடையாள அட்டை மட்டுமே வைத்திருந்த அந்நபர்களிடம் பிரிட்டனுக்குச் செல்லத் தேவையான ஆவணங்கள் (பாஸ்போர்ட் மற்றும் மின்னணு அனுமதி – ETA) இல்லாததால் ஏற முடியவில்லை; வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள இரண்டு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்தும் உதவியின்றித் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சொந்தச் செலவில் மிலான் (Milan) விமான டிக்கெட் வாங்கி, அங்கிருந்து ரயில் மூலம் சுவிட்சர்லாந்து திரும்பிய டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), செலவுத் தொகையைக் கேட்டபோது ‘விமானத்தில் ஏற வராதவர்கள்’ (No-Show) எனக் கூறி நிறுவனம் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எட்னா எரிமலைச் செயல்பாட்டால் ஏற்பட்ட தாமதத்தால் விமானம் ரத்தானதற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஈசிஜெட், பயண ஆவணங்களை உறுதி செய்வது பயணியின் பொறுப்பு என விளக்கமளித்துள்ளது.



