சுவிட்சர்லாந்தில் வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கட்டிட அனுமதிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை! – ஜெனீவாவில் அனுமதி கிடைக்க 500 நாட்கள் வரை தாமதம் எனக் கட்டுமான நிறுவனங்கள் சங்கம் அதிருப்தி.

சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் சுமார் 10,000-க்கும் அதிகமான வீடுகள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், இதனைச் சமாளிக்கக் கட்டிட அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் எனச் சுவிஸ் கட்டுமான நிறுவனங்களின் சங்கம் (SBV) மற்றும் பொருளாதார அமைப்பான ‘Economiesuisse’ ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
டிசீனோ (Ticino) மற்றும் கிராபுண்டன் (Graubünden) மாகாணங்களில் 90 நாட்களுக்குள் கட்டிட அனுமதி வழங்கப்படும் நிலையில், சூரிக்கில் சராசரியாக 167 நாட்களும், ஜெனீவாவில் 2010-ஆம் ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்து சுமார் 497 நாட்களும் தாமதமாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க, அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச விதிகளையும், கட்டாயக் கால எல்லையையும் நிர்ணயிக்க வேண்டும் எனவும், காரணமின்றி ஆட்சேபனை தெரிவிப்பவர்களுக்கு 5,000 பிராங்குகள் கட்டணம் விதிக்க வேண்டும் எனவும் கட்டுமானத் துறை கோரியுள்ளது.



