Swiss Tamil Events

சுவிஸில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான வணக்க நிகழ்வு

சுவிஸில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கான வணக்க நிகழ்வு

சுவிட்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய போராளிகளின் நினைவைச் சுமந்த வணக்க நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு முக்கிய திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மற்றும் தளபதிகள் உள்ளிட்ட போராளிகளின் நினைவாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடற்பரப்பில் பயணித்தபோது சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பலாலி இராணுவத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதற்காக சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட கூட்டுச் சதியை முறியடித்து, சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு போராளிகளும், கேணல் கிட்டுவின் தலைமையிலான பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராகு உள்ளிட்ட மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.

033 017 019 018 010 008 1

அத்துடன், பிரான்ஸ் நாட்டில் சிறிலங்கா அரசின் கைக்கூலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் உள்ளிட்ட போராளிகளின் நினைவுகளும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த உணர்வெழுச்சி வணக்க நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தியதுடன், வணக்கப் பாடல்களும் காணிக்கையாக இடம்பெற்றன. மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், நினைவுரைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில், “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன் தமிழீழ தேசியக் கொடி கையேந்தப்பட்டது. தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவடைந்தன.

இந்த வணக்க நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளுக்கு மரியாதை செலுத்தினர்.