ஆர்காவ் மாகாண நதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், மற்றொருவர் உயிருடன் மீட்பு
ஆர்காவ் மாகாண நதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், மற்றொருவர் உயிருடன் மீட்பு

ஆர்காவ் மாகாண நதிகளில் அடுத்தடுத்து விபத்துகள் – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம், மற்றொருவர் உயிருடன் மீட்பு
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாகாணத்தில் உள்ள ரைன் மற்றும் ரொய்ஸ் நதிகளில் ஒரே நாளில் இடம்பெற்ற மூன்று தனித்தனி நீர்விபத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் இன்னும் காணாமல் போயுள்ளார். மேலும் ஒருவர் கடைசி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
முதல் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில் ரைன் நதியில் இடம்பெற்றதாக ஆர்காவ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. மொஹ்லின் பகுதியில் வசித்து வந்த 35 வயதுடைய ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த நபர், தனது நண்பர்களுடன் நதியில் நீராடச் சென்றிருந்தபோது திடீரென நீரில் சிக்கி தத்தளிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பலர் உடனடியாக அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் படகின் உதவியுடன் அவரை நீரிலிருந்து மீட்டனர். சம்பவ இடத்திலேயே உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை மற்றும் இதய மீளுயிர்ப்புச் செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில், அதே இரவு சுமார் 11.00 மணியளவில் ஆர்காவ் காவல்துறைக்கு மேலும் ஒரு அவசர தகவல் கிடைத்தது. கெபென்ஸ்டோர்ஃப் பகுதியில் உள்ள ரொய்ஸ் நதிப் பாலம் அருகே ஒருவர் நதிக்குள் குதித்த பின்னர் மீண்டும் மேலே வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரவு நேரம் வரை தொடர்ந்தன. இருப்பினும், துர்காவ் மாகாணத்தில் வசித்து வந்த 20 வயதுடைய சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூன்றாவது சம்பவம் அதிகாலை சுமார் 1.00 மணியளவில் லாவ்ஃபென்புர்க் பகுதியில் உள்ள ரைன் நதியில் இடம்பெற்றது. நதியில் இருந்து உதவி கோரி ஒருவர் கத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய மீட்புக் குழுவினர், ஜெர்மன் காவல்துறையின் ஒத்துழைப்புடன் 43 வயதுடைய ஜெர்மன் பிரஜையை நதியிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கடுமையான வெப்ப அலை காரணமாக கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தின் நதிகள் மற்றும் ஏரிகளில் நீராடச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, நீரின் வேகமான ஓட்டம், ஆழமான பகுதிகள் மற்றும் திடீர் நீரோட்ட மாற்றங்கள் போன்ற அபாயங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.





