நியூஷாத்தெல் கன்டோனில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
நியூஷாத்தெல் கன்டோனில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் நியூஷாத்தெல் கன்டோனில் (Neuchâtel) காட்டுத்தீ அபாயம் தற்போது ஐந்து நிலைகளில் மூன்றாவது நிலையான “கணிசமான அபாயம்” (Stufe 3 von 5) என மதிப்பிடப்பட்டுள்ளதாக கன்டோன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை, குறைவான மழைப்பொழிவு, தொடர்ச்சியான வெயில் மற்றும் மிதமான காற்று ஆகிய காரணங்களால் காட்டு நிலப்பரப்புகள் மற்றும் தாவரங்கள் வேகமாக உலர்ந்து வருவதால் இந்த அபாய நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, காடுகள் மற்றும் காடுகளுக்கு அண்மையிலான பகுதிகளில் தீ பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக வெளிப்புறங்களில் தீ மூட்டுவதற்கு முன் அதிகாரிகள் வெளியிடும் எச்சரிக்கைகள் மற்றும் தடைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும். காற்று அதிகமாக வீசும் நேரங்களில் திறந்த வெளிகளில் தீ மூட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிகரெட் துண்டுகள் மற்றும் தீக்குச்சிகளை எக்காரணம் கொண்டும் தரையில் அல்லது இயற்கை சூழலில் வீசக்கூடாது. உணவு சமைப்பதற்கோ அல்லது பார்பிக்யூ செய்வதற்கோ அமைக்கப்பட்ட பாதுகாப்பான தீக்குழிகள் அல்லது கிரில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீ நேரடியாக நிலத்துடன் தொடர்பு கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீ மூட்டும் இடங்கள் மரங்கள் மற்றும் உலர்ந்த தாவரங்களிலிருந்து போதிய தூரத்தில் இருக்க வேண்டும். எரியும் தீயை ஒருபோதும் கண்காணிப்பின்றி விடக்கூடாது. தீப்பொறிகள் அல்லது எரியும் நெருப்புத் துண்டுகள் உடனடியாக அணைக்கப்பட வேண்டும்.
புறப்படும் முன் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதையும், சுற்றுப்புறத்தில் மீண்டும் தீப்பற்றும் அபாயம் இல்லையென்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏதேனும் தீ விபத்து அல்லது சந்தேகத்திற்கிடமான புகை, தீப்பற்றல் போன்ற சம்பவங்கள் காணப்பட்டால் உடனடியாக 118 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காட்டுத்தீ அபாயம் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது என்றும், குறிப்பாக தெற்கு மற்றும் மேற்குத் திசை நோக்கிய சரிவுப் பகுதிகள் மற்றும் அதிகமாக உலர்ந்த தாவரங்கள் காணப்படும் இடங்களில் அபாயம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் கோடை காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், சிறிய அலட்சியமும் பெரிய காட்டுத்தீ விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு நியூஷாத்தெல் கன்டோன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
©Kanton Neuenburg






