சுவிட்சர்லாந்து குடியுரிமை விண்ணப்ப நடைமுறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம்
சுவிட்சர்லாந்து குடியுரிமை விண்ணப்ப நடைமுறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம்

சுவிட்சர்லாந்து குடியுரிமை விண்ணப்ப நடைமுறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம்
சுவிட்சர்லாந்தில் சாதாரண குடியுரிமை (Ordinary Naturalisation) பெறும் நடைமுறைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் வேகமானதாகவும் திறமையானதாகவும் மாறவுள்ளன. இதற்கான சட்ட மாற்றங்களுக்கு கூட்டாட்சி அரசு (Federal Council) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், இதுவரை தபால் மூலமாக இடம்பெற்று வந்த ஆவண பரிமாற்ற முறை முற்றிலும் நீக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளன. இதனால் குடியுரிமை விண்ணப்பங்களின் செயலாக்க நேரம் குறைந்து, நிர்வாகச் செயல்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிகளின்படி, கன்டோன் அதிகாரிகளும் குடிவரவு தொடர்பான சுவிட்சர்லாந்து அரசின் முக்கிய அமைப்பான மாநில குடிவரவு செயலகமும் (SEM) இனிமேல் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் மின்னணு வழியில் மட்டுமே மேற்கொள்ளும்.
இந்த சீர்திருத்தத்தின் மையமாக, மத்திய குடிவரவு தகவல் அமைப்பான SIMIC (Sistema d’informazione centrale sulla migrazione) இல் புதிய டிஜிட்டல் இணைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கன்டோன்கள் தங்களது மட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட குடியுரிமை கோப்புகளை நேரடியாக SEM-க்கு அனுப்ப முடியும்.

அதேபோல், குடியுரிமை வழங்கப்படுகிறதா அல்லது நிராகரிக்கப்படுகிறதா என்ற இறுதி முடிவுகளை SEM இந்த மின்னணு தளத்தின் மூலமாகவே கன்டோன்களுக்கு அறிவிக்கும். இதற்காக SIMIC அமைப்பிலும் குடியுரிமை தொடர்பான விதிமுறைகளிலும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக, ஆர்காவ் (Aargau), பாசல் லாண்ட்ஷாஃப்ட் (Basel-Landschaft), ஜெனீவா (Genève), சென்ட்கேலன் (St. Gallen) மற்றும் சூரிச் (Zürich) ஆகிய ஐந்து கன்டோன்களில் சோதனைத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
சுமார் ஒரு வருடம் நீடிக்கும் இந்த சோதனைத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலிருந்து மற்ற அனைத்து கன்டோன்களுக்கும் இந்த டிஜிட்டல் அமைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீனமயமாக்கல், சுவிட்சர்லாந்தின் குடிவரவு நிர்வாக அமைப்புகளை மேம்படுத்தும் “SIMIC புதுப்பிப்பு” (Renewal of SIMIC) என்ற விரிவான தகவல் தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை செயல்முறைகள் அனைத்தும் எதிர்கால டிஜிட்டல் தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன.






