சிறிய பார்சல்களுக்கு புதிய கட்டணம்: ஐரோப்பிய ஒன்றிய முடிவுக்கு சுவிஸ் வணிக அமைப்பு ஆதரவு ஐரோப்பிய ஒன்றியம் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியால் அதிகரித்து வரும் சிறிய பார்சல் இறக்குமதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கையாளும் கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை சுவிட்சர்லாந்தின் Swiss Retail Federation வரவேற்றுள்ளது. இந்த புதிய கட்டணம் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, சிறிய அளவிலான பார்சல்கள் அதிக அளவில் வருவதால் உருவாகும் வரிசைப்படுத்தல், சோதனை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடு போன்ற செயல்பாடுகளுக்கான செலவுகளை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கட்டணத்தின் சரியான தொகை இன்னும் European Commission மூலம் நிர்ணயிக்கப்படவில்லை. இதுபோன்ற ஒரு கட்டணத்தை சுவிட்சர்லாந்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என Swiss Retail Federation முன்னதாகவே பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது. தற்போது ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள இந்த முடிவு, சுவிட்சர்லாந்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சுவிட்சர்லாந்து இதனை பின்பற்றாமல் இருந்தால், ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்களது லாஜிஸ்டிக் முறைகளை மாற்றி, சுவிட்சர்லாந்தை ஐரோப்பா முழுவதற்குமான பார்சல் இறக்குமதி மையமாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால், இதுபோன்ற கட்டணத்தை சுவிட்சர்லாந்தும் விரைவாக அறிமுகப்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த தொடர்பில் தேவையான அரசியல் ஆதரவு சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, சர்வதேச ஆன்லைன் விற்பனை தளங்களின் பொறுப்புகள், குறிப்பாக பொருட்களின் பாதுகாப்பு, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் பார்சல்களின் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பான பல்வேறு பாராளுமன்ற முன்மொழிவுகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. © KeystoneSDA