வடகொரியா – சுவிட்சர்லாந்து மோதல் தீவிரம்! – சுவிஸ் தூதரகத் தலைவரை 48 மணி நேரத்தில் வெளியேற வடகொரியா உத்தரவு.

வடகொரியாவின் பியோங்யாங்கில் (Pyongyang) புதிதாகத் திறக்கப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தின் தலைவர் சில்வைன் ஆஸ்டியரை (Sylvain Astier) ‘விரும்பத்தகாத நபராக’ அறிவித்துள்ள வடகொரிய வெளியுறவு அமைச்சகம், அவர் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன் தூதரக அலுவலகத்தை மூடுமாறும் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர்களை ரஷ்யர்களாக்கும் முயற்சிகள் வொன்சான் (Wonsan) நகரிலுள்ள சொங்டோவொன் (Songdowon) சர்வதேச குழந்தைகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, அந்நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து தனது தடைகள் பட்டியலில் சேர்த்ததே இக்கடும் நடவடிக்கைக்குக் காரணமாகும்.
வடகொரியாவின் இம்முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து, தூதரகத் தலைவர் பெய்ஜிங்கில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்குத் திரும்ப ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.



