பிளாக் ஃபிரைடே மற்றும் சைபர் மண்டே சிறப்புச் சலுகைகள்! – கூட்ட நெரிசல் திருடர்கள் மற்றும் இணையவழி மோசடிகள் குறித்து ஜெனீவா மாகாணக் காவல்துறை விரிவான எச்சரிக்கை.

பிளாக் ஃபிரைடே (நவம்பர் 27) மற்றும் சைபர் மண்டே (நவம்பர் 30) ஆகிய தள்ளுபடி நாட்களை முன்னிட்டு, கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் இணையவழிப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தித் திருடர்களும் மோசடிக்காரர்களும் கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஜெனீவா மாகாணக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெரிசலான கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பிக்பாக்கெட் அடித்தல், கவனத்தைத் திசைதிருப்பி உடைமைகளை அபகரிக்கும் தந்திரத் திருட்டுகள் மற்றும் பொருட்களைப் பறித்துக்கொண்டு ஓடும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், வாகனங்களில் வெளிப்படையாகத் தெரியும்படி வைக்கப்படும் ஷாப்பிங் பைகள் மற்றும் வீட்டு வாசல்களில் கவனிக்கப்படாமல் விடப்படும் பொதிகளும் எளிதில் திருடப்படக்கூடும் எனக் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இணையவழியில், தள்ளுபடி சலுகைகளின் அவசரத்தைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் பல பொறிகளை விரிக்கின்றனர். தவறான கட்டண எச்சரிக்கைகள், சுங்கக் கட்டணம் செலுத்தக் கோரும் போலித் தபால் மற்றும் கூரியர் (DHL, DPD) செய்திகள், அஞ்சல் பெட்டிகளில் போடப்படும் போலி QR குறியீடு அறிவிப்புகள் ஆகியவற்றின் மூலம் வங்கி விவரங்கள் திருடப்படுகின்றன.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலி இன்ஃப்ளூயன்சர் விளம்பரங்கள் மற்றும் சுவிஸ் நிறுவனங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட «.ch» முகவரி கொண்ட போலி இணையதளங்கள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க, கடைகளில் பைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், இணையத்தில் பொருட்களை வாங்கும்போது இயன்றவரை ‘இன்வாய்ஸ்’ (Invoice) மூலம் பணம் செலுத்துமாறும், இணைப்புகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ செயலிகள் மூலம் ஆர்டர்களைச் சரிபார்க்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
திருட்டு அல்லது மோசடிக்கு உள்ளானால் உடனடியாக 117 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளவும், வங்கி அட்டைகளை முடக்கி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



