வோ (Vaud) மாகாணத்தில் போலி அதிகாரி வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது! – 200,000 பிராங்குகளுக்கும் அதிகமான ரொக்கப் பணம் மற்றும் நகைகள் பறிமுதல்.

சுவிட்சர்லாந்தின் வோ (Vaud) மாகாணத்தில் காவல்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் போல வேடமிட்டு (ஆள்மாறாட்டம்) மோசடியில் ஈடுபட்ட 9 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மௌடன் (Moudon), ரூஜ்மோன்ட் (Rougemont), நியோன் (Nyon) மற்றும் வெவே (Vevey) ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் சுவிஸ், பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய குடிமக்கள் அடங்கிய இக்கும்பல் சிக்கியது.
வெவே பகுதியில் நடந்த சோதனையின்போது ஏரிக்குள் குதித்துத் தப்பிக்க முயன்ற சந்தேக நபரும் பிடிபட்டார்.
இவர்களிடமிருந்து 200,000 சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான ரொக்கம், நகைகள் மற்றும் வங்கி அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; கைதானவர்களில் இருவருக்குத் தலா ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022 முதல் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருவதால், அந்நியர்களிடம் வங்கி விவரங்கள், பணம் அல்லது நகைகளை ஒப்படைக்க வேண்டாம் எனவும், சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 117 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் வோ காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.



