சூரிச் புலாச் (Bülach) பகுதியில் உரிமம் இன்றி போடாக்ஸ் மற்றும் அழகுசாதனச் சிகிச்சைகள் அளித்த 35 வயதுப் பெண் கைது! – சோதனையில் ஊசிகள், லேசர் கருவி மற்றும் 32,700 சுவிஸ் பிராங்குகள் ரொக்கப் பணம் பறிமுதல்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) மாகாணம் புலாச் (Bülach) பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில், உரிய தொழில்முறை உரிமம் இன்றி போடாக்ஸ் (Botox) மற்றும் அழகுசாதனச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த 35 வயதுப் பெண்ணைச் சூரிச் மாகாணக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த குடியிருப்பில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு போடாக்ஸ் சிகிச்சை அளிக்கத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
சோதனையின்போது, போடாக்ஸ் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic acid) கொண்ட பொருட்கள், ஊசிகள், லேசர் கருவி மற்றும் 32,700 சுவிஸ் பிராங்குகள் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அப்பெண், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



