சுவிட்சர்லாந்தில் கிறிஸ்மஸ் சந்தைகளுக்குப் பலத்த பாதுகாப்பு! – பயங்கரவாத அச்சுறுத்தலால் நகரங்கள் தோறும் புதிய வாகனத் தடுப்புகள் அமைப்பு.
சுவிட்சர்லாந்தில் விரைவில் கிறிஸ்மஸ் சந்தைகள் தொடங்கவுள்ள நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இன்னும் உயர்வாகவே இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் பல லட்சம் சுவிஸ் பிராங்குகள் செலவில் புதிய வாகனத் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, அனுமதியின்றி வாகனங்கள் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கச் சூரிச் (Zürich) நகரம் 150 நகர்த்தக்கூடிய தடுப்புகளை வாங்கவுள்ளது.
செயின்ட் காலன் (St. Gallen) காவல்துறை மற்றும் பெர்ன் மாநிலத்தின் லாங்கெந்தால் (Langenthal) நகர சபையும் அவசர காலங்களில் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதில் செல்லக்கூடிய மடங்கும் தடுப்புகளை நிறுவத் திட்டமிட்டுள்ளன.
மேலும், ஆராவ் (Aarau) நகரில் பாதுகாப்புத் தடுப்புகளுக்காக 400,000 பிராங்குகள் ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சுமார் 880 பேர் மட்டுமே வசிக்கும் ஆர்காவ் மாநிலத்தின் ஷ்லாஸ்ரூட் (Schlossrued) கிராமத்திலும் முதல்முறையாகச் சந்தை நுழைவாயிலில் கனமான கான்கிரீட் கட்டைகள் வைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



