சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தல் 2027: சுதா கணபதிப்பிள்ளை SP கட்சியின் வேட்பாளராகப் பரிந்துரை!
சுவிட்சர்லாந்தின் சொலத்தூர்ன் மாநிலத்தில் உள்ள டெரெண்டிங்கன் (Derendingen) நகரின் சோசலிசக் கட்சியான SP, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுவிஸ் தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரோஜர் ஸ்பிச்சிகர் (Roger Spichiger) மற்றும் சுதா கணபதிப்பிள்ளை (Sutha Ganapathipillai) ஆகியோரை ஒருமனதாக வேட்பாளர்களாகப் பரிந்துரைத்துள்ளது.
SP Derendingen கட்சியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கட்சி வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் வேட்பாளர்கள் குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளது.
வேட்பாளர்களில் ஒருவரான ரோஜர் ஸ்பிச்சிகர், தற்போது டெரெண்டிங்கன் நகரின் நகரசபைத் தலைவராகவும் (Gemeindepräsident), சொலத்தூர்ன் மாநில நாடாளுமன்ற உறுப்பினராகவும் (Kantonsrat) பணியாற்றி வருகிறார். கட்டுமானப் பொறியியலில் HTL பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர், நகராட்சி மற்றும் மாநில அரசியல் பணிகளின் ஊடாக மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவர் எனக் கட்சி தெரிவித்துள்ளது. பாதுகாப்பான வேலைவாய்ப்புகள், நியாயமான ஊதியம், தரமான கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து பாடுபடுவதாகவும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மற்றொரு வேட்பாளரான சுதா கணபதிப்பிள்ளை, SP Derendingen கட்சியின் தலைவராகவும், சொலத்தூர்ன் மாநில SP Migrant:innen அமைப்பின் இணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். Lean Management துறையில் திட்ட மேலாளராகப் பணியாற்றும் அவர், தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சூழல் தொடர்பில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளதாகக் கட்சி தெரிவித்துள்ளது.

அரசியல் ரீதியாக, சமூக ஒருங்கிணைப்பு, அரசியல் பங்கேற்பு மற்றும் ஒருவரின் பூர்வீகத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் செயல்பட்டு வருகிறார்.
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுவிட்சர்லாந்து தேசிய நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சொலத்தூர்ன் மாநிலத்தில் SP கட்சியின் வேட்பாளர்களாக இருவரும் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சுதா கணபதிப்பிள்ளை தேசிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது சுவிஸ் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பு: கட்சியின் வேட்பாளர் பரிந்துரை என்பது தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் அல்லது தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார் என்பதைக் குறிக்காது.



