வோட் கன்டோனில் போலி பார்க்கிங் QR குறியீடு மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் வோட் கன்டோனில் (Vaud) QR குறியீடுகளை பயன்படுத்தி வங்கி மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடும் புதிய மோசடி அலை ஒன்று பரவி வருவதாக வோட் கன்டோனல் காவல் துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
குறிப்பாக கிரிசியேர் (Crissier), ரெனாங் (Renens) மற்றும் புசினி (Bussigny) பகுதிகளில் இந்த மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குற்றவாளிகள் உண்மையான பார்க்கிங் அபராத அறிவிப்புகளைப் போல தோற்றமளிக்கும் போலி சீட்டுகளை வாகனங்களில் விட்டு செல்கின்றனர். இவை ஜெனீவா மற்றும் பிற பகுதிகளில் செயல்படும் Fondation des Parkings நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அபராத அறிவிப்புகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சுவிஸ் அஞ்சல் சேவை (Swiss Post) அனுப்பும் விநியோக அறிவிப்புகளைப் போன்ற போலி விநியோகச் சீட்டுகளும் பரவிவருகின்றன. இந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு பொதுமக்கள் தூண்டப்படுகின்றனர்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், மிகவும் நம்பகமாகத் தோன்றும் போலி இணையதளங்களுக்கு பயனர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் கோரப்படுகின்றன. மேலும் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 80 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது.
இதுவரை அடையாளம் காணப்பட்ட இரண்டு போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதே மாதிரியான புதிய இணையதளங்கள் மிக விரைவில் மீண்டும் தோன்றக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் அபராதச் சீட்டு அல்லது விநியோக அறிவிப்பு உண்மையா என்ற சந்தேகம் ஏற்பட்டால், பணம் செலுத்துவதற்கு முன்பு அருகிலுள்ள காவல் நிலையத்தில் அதை சரிபார்த்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீப காலமாக சுவிட்சர்லாந்தில் QR குறியீடுகள் மூலம் நடைபெறும் இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அறிமுகமற்ற இணையதளங்களில் தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம் என அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.



