சுவிட்சர்லாந்தில் மலிவு வாடகை வீடுகள் இன்னும் அரிது சுவிட்சர்லாந்தில் வாடகை வீட்டு சந்தை இன்னும் கடுமையான அழுத்தத்தில் நீடித்து வருவதாகவும், 2026 ஆண்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் இலகுவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. UBS வங்கியால் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, நாட்டின் வீட்டு வசதி நெருக்கடியை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வின் படி, 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டில் சுமார் 2,000 புதிய வாடகை குடியிருப்புகள் கூடுதலாக கட்டி முடிக்கப்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த அதிகரிப்பு, தற்போதைய தேவையை கருத்தில் கொண்டால் மிகவும் குறைவானதாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதை அவர்கள் “கடலில் ஒரு துளி” என வர்ணித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். குறிப்பாக நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு, குடியேற்றம் மற்றும் கட்டுமான செலவுகள் உயர்வு போன்ற காரணிகள் வாடகை வீடுகளின் கிடைப்பை மேலும் சிரமப்படுத்தி வருகின்றன. இருப்பினும், Aargau, Geneva மற்றும் St. Gallen போன்ற சில கன்டோன்களில் நிலைமை ஓரளவு மேம்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வீட்டு வசதி நெருக்கடி மிக அதிகமாக காணப்படும் Zurich, Zug மற்றும் கிரௌவுண்டன் போன்ற பகுதிகளில் கட்டுமான செயல்பாடுகள் மந்தமாகவோ அல்லது குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது. மொத்தத்தில், வாடகை வீட்டு சந்தையில் சீரான மாற்றம் ஏற்பட இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால், மலிவு வாடகை வீடுகள் தேடும் பொதுமக்கள் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை நீடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.