சுவிற்சர்லாந்து பேர்ன் மாநகரில் “வைரக்குடுவை” நூல் அறிமுக விழா – 2026
யாழ்/உரும்பையூர் து.திலக் (கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து வீரகேசரி வார வெளியீட்டில் வாரந்தோறும் எழுதிய படைப்பாளர் பார்வை “வைரக்குடுவை” தொகுதி 01, ஆளுமைகள் 25 நூல் அறிமுகவிழா கடந்த 09.05.2026 சனிக்கிழமையன்று சுவிற்சர்லாந்து Eropaplatz B1, 3008 Bern எனும் இடத்தில் தாயக அறிவிப்பாளர் ஜனனி கார்த்திகேசு தலைமையில் தமிழர் களறி ஆவணக்காப்பக வெளியீடாக அறிமுகமானது.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், சென்மார்க்கிறேத்தன் கதிர்வேலாயுத சுவிகள் ஆலயம் சார்பாக சோமசுந்தரம் விநாயகமூர்த்தி, ஈழத்தின் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார், நூலாசிரியரின் உறவினர் நாகலிங்கம் மகேஸ்வரன், செங்காளன் மாநிலத்திலிருந்து வருகை தந்த சமூக ஆர்வலர் திரு.வீரகத்தி சிவராசா, ராதா நடனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.ஞானசுந்தரி வாசன், சலங்கை நர்த்தனாலய அதிபர் முதுகலைமாணி திருமதி.மங்களநாயகி வசந்தகுமார், நூலில் இடம்பெற்ற ஆளுமைகள் சார்பாக திருக்கோணேஸ்வரா நடனாலய அதிபர் முனைவர் மதிவதனி சுதாகரன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திரு.சண் தவராசா, ஊடகவியலாளர் திரு.கனகரவி, தமிழ்க் கல்விச் சேவை ஆசிரியர் திருமதி.வனசநாயகி தங்கவேல், ஈழத்தின் பிரபல நிதர்சன ஒலிப்பதிவாளர் திரு.கிருபா, ஜெனீவா கல்வியியலாளர் கந்தையா அருந்தவராசா, பேர்ன் வள்ளுவர் தமிழ்ப்பள்ளி முதல்வர் பொன்னம்பலம் முருகவேள் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
வரவேற்பு நடனத்தை திருக்கோணேஸ்வரா நடாலய மாணவி செல்வி.சயந்தா ராதாகிருஷ்ணன் வழங்க வரவேற்புரையை திருமதி.எழிலினி கேதீஸ்வரன் ஆற்றினார். நிகழ்வின் ஆருள்நல் ஆசியுரையினை ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருச்சுனையர் சிவருசி தர்மலில்கம் சசிக்குமார் வழங்கினார். தொடர்ந்து வெளியீட்டுரை, அறிமுகவுரையினை தமிழர் களறி ஆவணக்காப்பகத்தைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் சிவகீர்த்தி நிகழ்த்தினார்.

நூலில் இடம்பெற்ற ஆளுமைகள் பற்றிய நயப்புரைகளை பேர்ன் பல்கலைக்கழக உளவியல்த் துறையில் கல்விகற்கும் மாணவியும், பேர்ன் வள்ளுவர் தமிழ்ப் பள்ளி ஆசிரியையுமான செல்வி.அருளினி முருகவேள், அறிவிப்பாளர் செல்வநேசன் கவிதரன், மொழியாசிரியை, முதுகலைமாணி திருமதி.நிதுர்சனா சுலக்சன்,
யாழ் பல்கலைக்கழக கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் திரு.இராசையா சிவகணேசன், தாயக எழுச்சிப் பாடகி, படைப்பாளி திருமதி.மணிமொழி கிருபாகரன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்புரையை தாயக மூத்த படைப்பாளி திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் ஆற்றினார்.
தொடர்ந்து நூலில் இடம் பெற்ற சுவிற்சர்லாந்து, கனடா வாழ் ஆளுமைகளான முனைவர் மதிவதனி சுதாகரன் (சுவிஸ்), பாவலர் பவானி தர்மகுலசிங்கம் (கனடா), ஆணழகன் உதயகுமார் சுதர்சன் (சுவிஸ்), பாடகி திருமதி வைஷ்சவி கவிகாந் (சுவிஸ்) ஆகியோர் மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பிரதிகள் வழங்கப்பட்டன. பிரதிகளை நூலாரியரின் சகோதரி திருமதி. வசந்தன் தமிழ்ச்செல்வி வழங்கி வைத்தார். ஏற்புரையினையும் நன்றுரையினையும் நூலாசிரியர் து.திலக்(கிரி) நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை இலக்கி கர்த்தாக்கள், ஆளுமைகள், ஆர்வலர்கள், துறைசார்ந்தவர்கள் என பலரும் கூடி ஒடியற்கூழ் குடித்து இரவுணவுண்டு மகிழ்ந்து நிறைந்தனர். இவ் ஏற்பாடுகளை தமிழர் களறி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
செய்தியாக்கம்
தமிழர் களறி ஆவணக்காப்பகம்
பேர்ன்,
சுவிற்சர்லாந்து