சமூக வலைத்தளங்கள் மூலம் சுவிட்சர்லாந்தை ‘சொர்க்கமாக’ வர்ணித்து இளைஞர்களை ஈர்க்கும் செல்வாக்கு மிக்கவர்கள்! – குடியேற விரும்புவோரிடையே தவறான நம்பிக்கைகளைத் தூண்டுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக, சுவிட்சர்லாந்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் அதிக சம்பளம் குறித்து வீடியோக்களைப் பதிவிட்டு, அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களைச் சுவிட்சர்லாந்திற்குப் பயணிக்கத் தூண்டும் போக்கு அதிகரித்துள்ளதாக ‘NZZ ஆம் சோன்டாக்’ (NZZ am Sonntag) செய்தி வெளியிட்டுள்ளது.
பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ‘லக்கி சுவிஸ்’ (Lucky Swiss) மற்றும் 2 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட சிரிய நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஆலோசகர் மசின் அலாசாத் (Mazin Alasad) ஆகியோர் இத்தகைய வீடியோக்கள் மூலம் இளைஞர்களை ஈர்த்து வருகின்றனர்.
இத்தகைய பதிவுகள் குடியேற விரும்புவோரிடையே தவறான எதிர்பார்ப்புகளை உருவாக்குவதுடன், பலர் ஆலோசகர்கள் என்ற போர்வையில் நிதி ஆதாயம் பெறுவதாகவோ அல்லது மத ரீதியாகச் செல்வாக்கு செலுத்த முயல்வதாகவோ மக்ரெப் பிராந்திய நிபுணர் பீட் ஸ்டாஃபர் (Beat Stauffer) எச்சரித்துள்ளார்.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மசின் அலாசாத், இடம்பெயர்வின் அபாயங்கள் குறித்தும் தனது வாடிக்கையாளர்களுக்குத் துல்லியமாகத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.



