சம்பளக் குறைப்பின்றி வாரத்திற்கு 4 நாட்கள் வேலை: சுவிஸ் சோதனை ஆய்வில் நேர்மறையான முடிவுகள்! – உற்பத்தித் திறன் அதிகரித்து, ஊழியர்களின் வேலைக் களைப்பு குறைந்ததாக பேர்ன் பல்கலைக்கழகம் தகவல்.

சுவிட்சர்லாந்தில் சம்பளக் குறைப்பின்றி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் பணிபுரியும் நடைமுறை குறித்த சோதனை ஆய்வில் ஊக்கமளிக்கும் நேர்மறையான முடிவுகள் வெளியாகியுள்ளன. பேர்ன் மாநிலத்தின் தொழில்கல்விப் பல்கலைக்கழகம் (Berner Fachhochschule) நடத்திய இந்த ஆய்வில், வாராந்திர வேலை நேரம் 42 மணி நேரத்திலிருந்து 35 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
இந்த மாற்றத்தால் ஊழியர்களின் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைச் சமநிலை மேம்பட்டதுடன், வேலைக் களைப்பு குறைந்து உற்பத்தித் திறனும் அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தலைவி கரோலின் ஷ்ட்ரௌப் (Caroline Straub) தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பேர்ன் மாகாணம் ஹெர்சோகன்புக்சி (Herzogenbuchsee) நகரில் உள்ள மர வீடு கட்டும் நிறுவனம் ஒன்று, 2027 தொடக்கத்தில் ஆறு மாதங்களுக்கு இம்முறையைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளது.
எனினும், கடின உழைப்பில் பெருமை கொள்ளும் சுவிஸ் மக்களின் மனநிலையை மாற்றுவதும், கட்டுமானம் போன்ற துறைகளில் குறைந்த நேரத்தில் அதே அளவு வேலையை முடிப்பதும் சவாலானது எனத் துறைசார் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



