நாய்களின் புற்றுநோய் மரபணுத் தரவுகள் மனிதப் புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என சுவிஸ் ஆய்வாளர்கள் தகவல்.
நாய்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் குறித்த மரபணுத் தகவல்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, ‘கனைன் கேன்சர் ஜீனோம் அட்லஸ்’ (Canine Cancer Genome Atlas) என்ற பெயரில் ஆய்வாளர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாநிலம் பெலிஞ்சோனா (Bellinzona) நகரில் உள்ள புற்றுநோய் ஆய்வு நிறுவனமும் (IOR), இத்தாலியின் சில பல்கலைக்கழகங்களும் இணைந்து சுமார் மூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்தத் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளன. நவம்பர் 12-ஆம் தேதி புகழ்பெற்ற ‘சயின்ஸ்’ (Science) அறிவியல் இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
நாய்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் பத்து வகையான புற்றுநோய்களின் மரபணுத் தகவல்கள் இதில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன. நாய்களுக்கு வரும் சில புற்றுநோய்கள் மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களைப் போலவே இருப்பதால், மனிதர்களுக்கான புற்றுநோய் சிகிச்சைகளைப் புரிந்துகொள்ளவும், புதிய மருந்துகளைச் சோதித்துப் பார்க்கவும் இந்தத் தரவுகள் பெரிதும் உதவும் என ஆய்வாளர் பிரான்செஸ்கோ பெர்தோனி (Francesco Bertoni) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாய்களுக்குத் துல்லியமான சிகிச்சை கிடைப்பதோடு, மனிதர்களுக்கான மருத்துவ ஆராய்ச்சிக்கும் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NEWS SOURCE – RSI.CH
IMAGE – AI GENERATE



