Swiss Tamil Events

சுவிஸில் திலீபனுக்கான 30 மணி நேர அடையாள உண்ணாவிரதம்

சுவிஸில் திலீபனுக்கான 30 மணி நேர அடையாள உண்ணாவிரதம்

இரண்டாம் தலைமுறையின் அக்கினிப்பறவைகள் அமைப்பினால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் HFT – Hunger Strike for Thileepan எனப்படும் லெப்.கேணல் திலீபனுக்கான 30 மணி நேர அடையாள உண்ணாவிரத நிகழ்வு, இவ்வாண்டும் சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பீல், சூரிச், பெர்ன், கூர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த நினைவு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வுகளின் ஒரு பகுதியாக லெப்.கேணல் திலீபனின் நினைவுக் கோபுரம் அமைக்கப்பட்டதுடன், அவரது நினைவைப் பிரதிபலிக்கும் பாடல்கள் மற்றும் ஓவியக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. அதேவேளை, லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் பங்களிப்பு மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த உரைகளும் இடம்பெற்றன.

“நினைவு நிகழ்வோடு ஏன் இந்த நிலைமை?” என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வுகளில், தற்போதைய ஈழத் தமிழர்களின் நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் தமிழ் ஈழத்தை நோக்கியதாக அக்கினிப்பறவைகள் அமைப்பு முன்வைக்கும் திட்டங்கள் மற்றும் அதன் நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களும் மக்களிடம் பகிரப்பட்டன.

சுவிஸில் திலீபனுக்கான 30 மணி நேர அடையாள உண்ணாவிரதம்

இதன்போது தமிழ் ஈழ அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், லெப்.கேணல் திலீபன் முன்வைத்த கோரிக்கைகளை உள்ளடக்கியதுடன், மொத்தம் 32 கோரிக்கைகள் அக்கினிப்பறவைகள் அமைப்பினரால் முன்வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடமிருந்தும் கையொப்பங்கள் பெறப்பட்டன.

சேகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய கோரிக்கைகள், சுவிட்சர்லாந்திலுள்ள அரச நிறுவனங்களின் மனித உரிமை அமைப்புகள் மற்றும் கோரிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நாடுகளின் தொடர்புடைய மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அக்கினிப்பறவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

WhatsApp Image 2026 09 30 at 14.29.27 2 WhatsApp Image 2026 09 30 at 14.29.27 1 WhatsApp Image 2026 09 30 at 14.29.27 WhatsApp Image 2026 09 30 at 14.28.32 1 WhatsApp Image 2026 09 30 at 14.28.32

லெப்.கேணல் திலீபனின் நினைவை முன்னிறுத்தி நடைபெறும் இந்த ஆண்டு நிகழ்வுகள், அவரது தியாகத்தை நினைவுகூருவதுடன், ஈழத் தமிழர்களின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பான கருத்துக்களையும் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.