Affoltern am Albis பகுதியில் சந்தேகத்திற்கிடமான நால்வர் கைது
சூரிச் மாநில காவல்துறையினர் வியாழக்கிழமை Affoltern am Albis பகுதியில் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் கொள்ளை மற்றும் வீடு உடைத்து திருடும் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக சுவிட்சர்லாந்துக்குள் வந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
A4 நெடுஞ்சாலையில் இத்தாலிய பதிவு இலக்கத்தைக் கொண்ட கார் ஒன்று காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தது. பின்னர் அந்த வாகனம் Affoltern am Albis பகுதியில் உள்ள ஓய்விடத்தில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. காரில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு சிலி நாட்டுப் பிரஜைகள் இருந்தனர்.
சோதனையின்போது, நால்வரும் சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சோதனையின்போது ஒருவர்காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போதிலும், அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும், வாகனத்திலும் அவர்களிடமும் வீடு உடைத்து திருடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மேலதிக காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், இந்த நால்வரும் சுவிட்சர்லாந்தில் கொள்ளை மற்றும் வீடு உடைத்து திருடும் சம்பவங்களில் ஈடுபடுவதற்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நால்வரும் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரிச் மாநில காவல்துறையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.



