Revolut வாடிக்கையாளர் தரவுகள் கசிவு – சுவிஸ் வாடிக்கையாளர்களும் பாதிப்பு
ஆன்லைன் வங்கி சேவையான Revolut-இன் சுமார் 700 வாடிக்கையாளர்களின் கணக்குத் தகவல்கள் சைபர் குற்றவாளிகளிடம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சில Revolut வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய சட்ட அமலாக்க அதிகாரிகள் எனக் கூறி குற்றவாளிகள் Revolut நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளனர். ஒரு சட்ட விசாரணைக்கு தேவையான தகவல்கள் எனக் கூறி, வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை வழங்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமான தொடர்பு என நம்பிய Revolut, அந்த கோரிக்கையை ஏற்று தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், இந்த தகவல்களைப் பெற்ற குற்றவாளிகள் Revolut நிறுவனத்திடம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் கப்பம் கோரியுள்ளனர். பணம் வழங்காவிட்டால் வாடிக்கையாளர்களின் தரவுகளை வெளியிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர்.
எத்தனை சுவிஸ் வாடிக்கையாளர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அதேவேளை, வாடிக்கையாளர்களின் பணம் நேரடியாக திருடப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் Revolut நிறுவனத்திற்கு முக்கியமான நேரத்தில் இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், Swiss banking licence பெறுவதற்கான விண்ணப்பத்தையும் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ளது.
பெரிய வங்கிகள் சைபர் பாதுகாப்பில் அதிக முதலீடு செய்தாலும், குற்றவாளிகள் தற்போது தொழில்நுட்ப அமைப்புகளை மட்டுமல்லாமல், போலியான அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் நிறுவனங்களையே ஏமாற்றும் முறைகளையும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்வது அவசியம்.



