Swiss News In Tamil

ஒபர்வின்டர்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கப்படும் பைக்கெட் திருடர்கள் ஐவர் கைது

ஒபர்வின்டர்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கப்படும் பைக்கெட் திருடர்கள் ஐவர் கைது

சூரிக் கன்டோனில் உள்ள வின்டர்தூர் (Winterthur) நகரத்தின் ஒபர்வின்டர்தூர் (Oberwinterthur) ரயில் நிலையப் பகுதியில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கையில் பைக்கெட் திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வின்டர்தூர் நகர காவல் துறை தெரிவித்துள்ளது.

பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் ரயில் நிலையப் பகுதியில் கண்காணிப்பில் இருந்த நகர காவல் துறையின் அதிகாரிகள் இரு ஆண்கள் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதை கவனித்தனர். அவர்களில் ஒருவன் அங்கு உள்ள பணப்பெறும் இயந்திரம் (Bankomat) அருகே சென்று பணத்தை எடுத்ததாகவும், பின்னர் ஒரு பொருளை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கீழ் எறிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில் அந்த பொருள் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வங்கி அட்டை என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 22 வயது மற்றும் 28 வயதுடைய இரு ருமேனிய குடிமக்கள் அங்கு கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு சில நேரங்களுக்குப் பிறகு அதே இடத்திற்கு அருகில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பெண்கள் இறங்கி பணப்பெறும் இயந்திரத்திற்குச் சென்றனர். அவர்கள் sun Glass , துண்டுத் துணி மற்றும் தலைக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்தை பகுதியளவில் மறைத்தபடி பணம் பெற முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று திருடப்பட்ட வங்கி அட்டைகள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

n7 1

இதனைத் தொடர்ந்து 24 வயது மற்றும் 35 வயதுடைய இரண்டு பல்கேரிய பெண்களும் அங்கு கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்த பெண்கள் வந்த காரின் ஓட்டுநர் மற்றும் வாகனத்தையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் சுமார் 6,000 சுவிஸ் பிராங்குகள் பணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 32 வயதுடைய பல்கேரிய ஓட்டுநரும் ஐந்தாவது நபராக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஐவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து முழுவதும் நடைபெற்ற பைக்கெட் திருட்டு சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை வின்டர்தூர் நகர காவல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Related Articles

Back to top button