உலகின் சிறந்த மருத்துவமனைகளில் மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன
உலகின் சிறந்த மருத்துவமனைகளில் மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன
அமெரிக்காவில் வெளியாகும் Newsweek இதழ் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில், உலகின் சிறந்த மருத்துவமனைகளின் பட்டியலில் மூன்று சுவிஸ் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் உலகம் முழுவதும் உள்ள 32 நாடுகளில் செயல்படும் சுமார் 2,500 மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்பட்டன. மருத்துவ சேவையின் தரம், நோயாளி பாதுகாப்பு, மருத்துவ நிபுணர்களின் மதிப்பீடுகள் மற்றும் நோயாளிகள் அளித்த சிகிச்சை விளைவுகளுக்கான கருத்துகள் (Patient-Reported Outcome Measures – PROMs) ஆகிய பல்வேறு அளவுகோள்களின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டது.
இந்த பட்டியலில் சூரிக் (Zürich) நகரில் அமைந்துள்ள சூரிக் பல்கலைக்கழக மருத்துவமனை (Universitätsspital Zürich) உலகளவில் 9வது இடத்தைப் பெற்று, சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனைகளில் மிக உயர்ந்த நிலையைப் பெற்றுள்ளது.

ஜெனீவா (Genève) நகரில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனை (HUG) உலகளவில் 19வது இடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து லௌசான் (Lausanne) நகரில் உள்ள வோட் பல்கலைக்கழக மருத்துவமனை (CHUV) 21வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மருத்துவ சேவை தரம் உலகளவில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுவதற்கு இந்த தரவரிசை மேலும் உறுதிப்படுத்தலாக இருப்பதாக சுகாதார துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உயர் தர மருத்துவ வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான மருத்துவ பணியாளர்கள் ஆகியவை சுவிஸ் மருத்துவமனைகள் சர்வதேச அளவில் சிறந்த இடத்தைப் பெறுவதற்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
© KeysroneSDA





