Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தும் சமூக வலைத்தளங்களும்: ஒரு எச்சரிக்கையும் விழிப்புணர்வும்

சுவிட்சர்லாந்தும் சமூக வலைத்தளங்களும்: ஒரு எச்சரிக்கையும் விழிப்புணர்வும்

சுவிட்சர்லாந்து அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய சட்ட மசோதா, டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற பெரிய சமூக வலைத்தளங்களுக்கு கடுமையான பொறுப்புகளை விதிக்கிறது. சட்டவிரோத உள்ளடக்கங்களை (வெறுப்புரை, அவதூறு, இணைய துன்புறுத்தல்) உடனடியாக நீக்க வேண்டும், புகாரளிக்க எளிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும், எந்தக் கணக்கின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்க வேண்டும், அல்காரிதம் எப்படி இயங்குகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை காட்ட வேண்டும் என்பதோடு, சுவிஸ் மொழிகளில் வாடிக்கையாளர் சேவையும், நாட்டில் அதிகாரப்பூர்வ பிரதிநிதியும் வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் மீறினால் “மோனிட்டரிங் வரி” என்ற புதிய அபராத வரியும் விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் Digital Services Act-ஐப் போலவே கடுமையானது. அதாவது, “உங்கள் தளத்தில் என்ன நடக்கிறதோ அதற்கு நீங்கள்தான் பொறுப்பு” என்று தொழில்நுட்ப நிறுவனங்களிடம் தெளிவாகச் சொல்கிறது.

இந்தச் சூழலில் நாம் – குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ்ச் சமூகம் – ஒரு கசப்பான உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே டிக்டாக் நேரலை (Live) அறைகளில் ஒரு சிறு தொகை ஈழத்தமிழர்கள் (ஆண்களும் பெண்களும்) ஆபாசமாகப் பேசுவது, குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக விவாதிப்பது, பாலியல் ரீதியான கேலிகளில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது. இவை அநேகமாக இரவு நேரங்களில் நடப்பவை. பல நேரலைகள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெறுகின்றன; அவற்றில் பெரும்பாலோர் வெளிநாட்டவர்கள் அல்லது வேறு மொழி பேசுபவர்களும்கூட.

SOCIAL MEDIA 01

இதில் வேதனை தருவது என்னவென்றால், இதில் பெண்களும் – தாய்மார்களும், இளம் பெண்களும் – பங்கேற்பது. தங்கள் கணவர்கள், குழந்தைகள், உறவுகள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை ஆபாச சொற்களுடன் பேசுவது, பாலியல் அனுபவங்களை விவரிப்பது போன்ற செயல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி நிரந்தரமாகி விடுகின்றன. ஒரு முறை நேரலையில் சொன்ன வார்த்தை யாரோ ஒருவர் பதிவிறக்கம் செய்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் வெளியாகலாம்.

இது ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின் மானத்தையும், ஒழுக்கப் பெயரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. “ஈழத்தமிழர்கள்” என்றதும் உலகறிந்த போராட்ட வரலாறு, கல்வி ஆர்வம், குடும்பப் பற்று, தியாக மனப்பான்மை நினைவுக்கு வர வேண்டும். ஆனால் இப்போது சிலர் காரணமாக “ஆபாச நேரலை செய்யும் சமூகம்” என்ற பிம்பம் உருவாகி வருவது கொடுமை.

சுவிட்சர்லாந்து சட்டம் அமலானதும் இது போன்ற நேரலைகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, கணக்குகள் முடக்கப்படும். புகார் அளிப்பது மிக எளிதாக இருக்கும். அதோடு, இந்த நேரலைகளைப் பார்த்து ரசிக்கும் அல்லது பகிரும் நபர்களும் சட்ட ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

எனவே ஒரு தாழ்மையான வேண்டுகோள்:

1. நீங்களோ உங்கள் உறவினர்களோ இது போன்ற நேரலைகளில் ஈடுபட்டால் உடனடியாக நிறுத்துங்கள். ஒரு நொடி “பிரபலமாக” வேண்டும் என்ற ஆசை வாழ்நாள் முழுவதும் தலைகுனிவைத் தரும்.

2. இது போன்ற நேரலைகளைப் பார்க்கும் போது Report செய்யுங்கள். டிக்டாக்கில் “Report Live” என்ற வசதி இருக்கிறது. ஒரு நிமிடம் செலவழித்து Report செய்தால் அந்த நேரலை நிறுத்தடை செய்யப்படும்.

3. குறிப்பாக பெற்றோர்கள், சகோதரர்கள் – உங்கள் வீட்டுப் பெண்கள், இளைஞர்கள் இரவு நேரங்களில் டிக்டாக் லைவில் இருந்தால் கண்காணியுங்கள். “அவரவர் சுதந்திரம்” என்ற பெயரில் சமூகத்தின் மானத்தை விற்க வேண்டாம்.

4. நாமே ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுவோம். “இது தவறு, நிறுத்து” என்று சொல்வதற்கு யாரும் தயங்க வேண்டாம்.

ஈழத்தமிழனின் பெயருக்கு இழுக்காக இல்லாமல், பெருமை சேர்க்கும் வகையில் வாழ்வோம். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமூகமும் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை.

சுவிட்சர்லாந்து சட்டம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது. இனியாவது திருந்துவோம். நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் பாரம்பரியம் ஒழுக்கமும் மானமும் நிறைந்ததாக இருக்கட்டும்.

ஒரு ஈழத்தமிழனின் வேண்டுகோள்

Related Articles

Back to top button