PFAS ரசாயனம் கலந்த இறைச்சி கடைகளுக்கு வரவே கூடாது! – சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரே மாதிரியான பரிசோதனை விதிகளையும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டையும் கோரும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு.

சுற்றுச்சூழலில் பல ஆண்டுகள் ஆனாலும் அழியாத ‘PFAS’ எனப்படும் நச்சு ரசாயனம் கலந்த இறைச்சி எந்தக் காரணம் கொண்டும் விற்பனைக் கடைகளுக்கு வரக் கூடாது எனச் சுவிஸ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு (Stiftung für Konsumentenschutz) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென் காலன் (St. Gallen) மாகாணத்தில் இறைச்சிப் பரிசோதனைகள் மிகக் கடுமையாக இருப்பதால் தங்களால் இறைச்சியை விற்க முடியவில்லை எனவும், ஆனால் பரிசோதனை குறைவாக உள்ள பிற மாகாணப் பண்ணைகள் தொடர்ந்து விற்பனை செய்வதாகவும் அண்மையில் விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்திருந்தது.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகத் தலைவி சாரா ஷ்டால்டர் (Sara Stalder), இது மக்களின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை என்பதால், சுவிஸ் மத்திய அரசு நேரடியாகப் பொறுப்பேற்று நாடு முழுவதும் ஒரே மாதிரியான பரிசோதனை விதிகளையும், பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்குச் சீரான இழப்பீட்டுத் திட்டத்தையும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாசுபட்ட இறைச்சியைச் சுத்தமான இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்யும் யோசனையை ‘ஏமாற்று வேலை’ என நிராகரித்துள்ள அவர், பால் பொருட்களுக்கும் PFAS உச்ச வரம்பை நிர்ணயிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தை விடச் சுவிட்சர்லாந்து பின்தங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


