சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களைக் குறைக்கப் புதிய மக்கள் முன்னெடுப்பு! – பெரியவர்களுக்கு 2 மாதங்களும், குழந்தைகளுக்கு 6 மாதங்களும் கட்டணத் தள்ளுபடி கோரி இடதுசாரி கூட்டணி பிரசாரம்.

சுவிட்சர்லாந்தில் குடும்பங்களுக்குச் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களிலிருந்து கணிசமான நிவாரணம் வழங்கக் கோரி, இடதுசாரி கூட்டணி சார்பில் “குறைந்த சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களுக்காக” என்ற புதிய மக்கள் முன்னெடுப்பு வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
சமூக ஜனநாயகக் கட்சி (SP), தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் நுகர்வோர் சங்கம் (FRC) ஆகியவை இணைந்து முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வயது வந்தவருக்கும் ஆண்டுக்கு இரண்டு மாத சராசரி பிரீமியங்களும் (சுமார் 1,000 பிராங்குகள்), ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ஆறு மாத பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இதற்கான கையொப்பம் சேகரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
ஆண்டுக்குச் சுமார் 8 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவாகும் இந்தப் புதிய நிவாரணத் திட்டத்திற்கு, அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் மீதான கூடுதல் வரி விதிப்பின் மூலம் நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூன் வாக்கெடுப்பு உட்படப் பல முயற்சிகளில் தோல்வியடைந்த போதிலும், இந்தப் புதிய மாதிரியின் மூலம் காப்பீடு பெற்றுள்ள 90 சதவீத மக்களின் சுமை குறையும் என இக்கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.



