எல்லை தாண்டிப் பணியாற்றுவோருக்கான வேலையின்மை உதவித்தொகை விதியில் மாற்றம்! – சுவிட்சர்லாந்திற்கு ஆண்டுக்கு 800 மில்லியன் பிராங்குகள் வரை கூடுதல் செலவாகும் எனக் கணிப்பு.
ஐரோப்பிய ஆணையம் எல்லை தாண்டி வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்கான வேலையின்மை உதவித்தொகை விதிகளில் கொண்டுவந்துள்ள புதிய சீர்திருத்தத்தால், சுவிட்சர்லாந்திற்கு ஆண்டுக்கு 500 முதல் 800 மில்லியன் பிராங்குகள் வரை கூடுதல் செலவு ஏற்படக்கூடும் எனப் பொருளாதார விவகாரங்களுக்கான மாநிலச் செயலகம் (SECO) மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரித்த இந்தச் சீர்திருத்தத்தின்படி, எல்லை தாண்டிப் பணியாற்றுவோர் வேலையிழந்தால், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் பொறுப்பு வசிக்கும் நாட்டிலிருந்து மாறி, கடைசியாகப் பணியாற்றிய நாட்டிற்கு மாற்றப்படுகிறது.
இதன்படி, சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் சுமார் 4 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமான எல்லை தாண்டிய பணியாளர்களுக்கு, இனி சுவிஸ் அதிகாரிகளே உதவித்தொகை வழங்க வேண்டிய சூழல் உருவாகும்.
இதற்குச் சுவிஸ் கூட்டாட்சி மன்றம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்ற நிலையில், இந்தத் திருத்தத்தை நிராகரிக்குமாறு சுவிட்சர்லாந்தின் தேசிய மன்றம் (National Council) கூட்டாட்சி மன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.



