சுவிட்சர்லாந்தில் சுகாதாரக் காப்பீட்டை இனி முழுமையாக ஆன்லைனில் மாற்றலாம்! – காகித நடைமுறைகளை ஒழிக்கும் முன்மொழிவுக்குக் கூட்டாட்சி மன்றம் ஆதரவு.
சுவிட்சர்லாந்தில் வரும் 2027-ஆம் ஆண்டில் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்கள் சராசரியாக 5 சதவீதம் அதிகரிக்கவுள்ள நிலையில், காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதற்கான நடைமுறைகளை முழுமையாக இணையவழிக்கு (Online) மாற்றும் முக்கிய முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுமாறு சுவிஸ் கூட்டாட்சி மன்றம் (Federal Council) பரிந்துரைத்துள்ளது. அடிப்படைச் சுகாதாரக் காப்பீட்டுப் பலன்கள் சட்டப்படி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பிரீமியம் கட்டணங்கள் பெருமளவில் வேறுபடுகின்றன.

இருப்பினும், காகித ஆவணங்கள் மற்றும் கையொப்பம் போன்ற சிக்கலான அதிகாரத்துவ நடைமுறைகள் காரணமாக, 2026-ஆம் ஆண்டில் சுமார் 8 சதவீதத்தினர் மட்டுமே தங்களது காப்பீட்டு நிறுவனத்தை மாற்றுவார்கள் என ‘கம்பாரிஸ்’ (Comparis) நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மலிவான காப்பீட்டுத் திட்டங்களுக்கு மாறினால் ஆண்டுக்குச் சுமார் 4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை சேமிக்க முடியும் என ‘மனிலாண்ட்’ (Moneyland) ஆய்வு தெரிவிக்கிறது.
இதன் அடிப்படையில், ஸ்மார்ட்போன் மூலம் நொடிகளில் பணப் பரிமாற்றம் செய்ய முடிகின்ற காலத்தில், காப்பீட்டை மாற்றுவதற்கும் காகித நடைமுறைகளை ஒழித்து முழுமையான ஆன்லைன் மாற்றத்தை அனுமதிக்க வேண்டும் எனப் பசுமை தாராளவாதிக் கட்சியின் (GLP) தேசிய கவுன்சிலர் பேட்ரிக் ஹாசிக் (Patrick Hässig) முன்மொழிந்துள்ளார். காப்பீடு மாறுவது எளிதாக இருந்தால், நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து மலிவான பிரீமியங்களும் சிறந்த சேவையும் மக்களுக்குக் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி மன்றத்தின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த முன்மொழிவுக்கு SP, பசுமைக் கட்சி, மையக் கட்சி மற்றும் FDP ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால், நாடாளுமன்றத்திலும் இது வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.



