ஜெனின் பகுதியில் கொள்ளை முயற்சி!
சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் (Graubünden) மாகாணம் ஜெனின் (Jenin) பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரு திருடர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அதிகாலை சுமார் 1:15 மணியளவில், கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான சத்தங்கள் கேட்பதாக விழிப்புணர்வுள்ள குடியிருப்பாளர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ரோந்துப் படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் அங்கேயே மடக்கிப் பிடித்தனர்.
மீண்டும் கட்டிடத்திற்குள் தப்பிச் சென்று பதுங்கிய மற்றொருவனைக் கிராபுண்டன் மாநிலக் காவல்துறையின் மோப்ப நாய் துல்லியமாகத் தேடிக் கண்டுபிடித்துப் பிடித்தது.
பிடிபட்ட இருவரும் 41 மற்றும் 48 வயதுடைய ருமேனிய நாட்டவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இருவரையும் காவலில் எடுத்துள்ள காவல்துறையினர், அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து இவர்கள் மீது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



