சுவிஸ் ஓய்வூதிய நிதியத்தின் மீது சைபர் அட்டாக்!
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கூட்டாட்சி ஓய்வூதிய நிதியங்களில் ஒன்றான ‘பப்ளிகா’வின் (Publica) மென்பொருள் விநியோகஸ்தர் நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கர இணையத் தாக்குதலில் முக்கியத் தரவுகள் கசிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இந்த ஹேக்கிங் தாக்குதலைக் கண்டறிந்த சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனம், உடனடியாக இது குறித்துக் குற்றவியல் புகார் அளித்துள்ளதுடன், கூட்டாட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் எந்தெந்தத் தரவுகள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்ற முழுமையான விவரங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என பப்ளிகா நிறுவனம் வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுவிஸ் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மற்றும் பல்வேறு கூட்டாட்சி அமைப்புகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தத் தரவு கசிவு, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்துக் காப்பீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பப்ளிகா நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
கூட்டாட்சி நிர்வாக ஊழியர்களுக்குச் சேவையளிக்கும் பப்ளிகா நிதியமானது, சுமார் 45 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சொத்து மதிப்பையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மென்பொருள் விநியோகஸ்தரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிறுவனத்துடன் சுவிட்சர்லாந்தின் வேறு எந்தக் கூட்டாட்சி அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



