சுவிட்சர்லாந்தில் 37% அதிகரித்த திவால் நிலை!
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 11,412 நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 37 சதவீதம் அதிகமாகும். இதில் கட்டுமானத் துறை, உணவு மற்றும் உபசரிப்புத் துறை, மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வர்த்தகத் தகவல் சேவை நிறுவனமான ‘கிரிஃப்‘ (Crif) இந்த அதிர்ச்சி தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தத் திடீர் அதிகரிப்புக்கு மிக முக்கியக் காரணம், அண்மையில் சுவிஸ் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றமே ஆகும்.
2025 ஜனவரி முதல், வணிகப் பதிவேட்டில் உள்ள நிறுவனங்களின் வரி நிலுவைகளைத் திவால் நடவடிக்கைகளின் மூலமும் வசூலிக்க முடியும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்ததே இந்த அதிகப்படியான திவால் நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மாகாண அளவில், சூரிச், ஜெனீவா மற்றும் வோட் (Vaud) ஆகிய பகுதிகளில் அதிகபட்ச திவால் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
நிறுவனங்கள் மூடப்படுவது ஒருபுறம் கவலையளித்தாலும், மற்றொரு நேர்மறையான செய்தியாக இதே காலகட்டத்தில் 40,487 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 2 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பாக வணிக ஆலோசனை, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் அதிக அளவிலான புதிய நிறுவனங்கள் உருவாகி, வர்த்தகத் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.



