Swiss Information

சுவிட்சர்லாந்தில் உங்கள் தோட்டத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுவிட்சர்லாந்தில் உங்கள் தோட்டத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுவிட்சர்லாந்தில் உங்கள் தோட்டத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

கோடை காலம் வந்துவிட்டால், வீட்டுத் தோட்டத்தில் நேரத்தை செலவிடுவது மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் பெரும் நன்மை அளிக்கிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் வீட்டுத் தோட்டம் உங்களுடைய சொத்தாக இருந்தாலும், விரும்பியதை எல்லாம் செய்யலாம் என்று அர்த்தமல்ல. பல்வேறு சட்டங்கள், கன்டோன் விதிமுறைகள் மற்றும் உள்ளூர் நகராட்சி ஒழுங்குகள் உங்கள் தோட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை கட்டுப்படுத்துகின்றன.

சிறிய தவறுகளுக்குக் கூட சில நேரங்களில் அபராதம் விதிக்கப்படக்கூடியதால், தோட்ட உரிமையாளர்கள் விதிமுறைகளை அறிந்திருப்பது அவசியமாகிறது.

தோட்டத்தில் உள்ள மரத்தை வெட்டலாமா?

உங்கள் தோட்டத்தில் உள்ள மரத்தை வெட்ட நினைத்தால் முதலில் நகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். சுவிட்சர்லாந்தில் மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதால், தனியார் சொத்தில் இருந்தாலும் அவற்றை விரும்பியபடி வெட்ட அனுமதி இல்லை.

மரத்தின் உயரம், தண்டு விட்டம், அதன் இருப்பிடம் உள்ளிட்ட பல அம்சங்களை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். பல இடங்களில் கட்டிட அனுமதி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பிறகே மரத்தை அகற்ற முடியும்.

jonathan kemper 4z3lnwEvZQw unsplash

மேலும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் செப்டம்பர் 30 வரை பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலமாக இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் மரங்களை வெட்டுவது பொதுவாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அயலவரின் மரக்கிளைகளை வெட்டலாமா?

அயலவரின் மரக்கிளைகள் அல்லது வேர்கள் உங்கள் நிலப்பரப்பிற்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தினால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவற்றை வெட்ட அனுமதி உள்ளது.

எனினும், சேதம் கணிசமானதாக இருக்க வேண்டும். அதிக நிழல், வெளிச்சம் குறைதல் போன்றவை சட்டரீதியாக பாதிப்பாக கருதப்படலாம். ஆனால் உங்கள் சொத்து எல்லைக்குள் நுழைந்த பகுதியை மட்டுமே வெட்ட முடியும். அதற்கு அப்பால் வெட்டினால் அது சட்ட மீறலாகும்.

தோட்டத்தில் நெருப்பு மூட்டலாமா?

தோட்டத்தில் நண்பர்கள், குடும்பத்தினருடன் பார்பிக்யூ (BBQ) செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டக் கழிவுகள், உலர்ந்த இலைகள் அல்லது பசுமைக் கழிவுகளை எரிப்பது சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

திறந்த வெளி முகாம்நெருப்பு (Open Campfire) பெரும்பாலான பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. சில அரிய சந்தர்ப்பங்களில் நகராட்சியின் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருக்கும்.

அதேவேளை, ஒரு மீற்றருக்கு குறைவான உயரமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு வசதிகள், தீக்கிண்ணங்கள், கிரில் சாதனங்கள் மற்றும் சிறிய மேசை நெருப்பு அமைப்புகளை பயன்படுத்த அனுமதி உண்டு.

களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாமா?

2001ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் சாலைகள், நடைபாதைகள், திறந்த வெளி பகுதிகள், மாடிகள், கூரைகள் மற்றும் சேமிப்பு இடங்களில் களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் குடிநீர் வளங்களை மாசுபடுத்தக்கூடிய இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை சட்டம் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. அதற்குப் பதிலாக வெந்நீர், வினிகர் போன்ற இயற்கை முறைகளை பயன்படுத்த அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

தோட்டத்தில் கருவி அறை அல்லது Greenhouse அமைக்கலாமா?

சுவிட்சர்லாந்தில் நிலத்துடன் நிரந்தரமாக இணைக்கப்படும் பெரும்பாலான கட்டமைப்புகளுக்கு கட்டிட அனுமதி அவசியமாகும். கருவி அறை, Greenhouse அல்லது நிரந்தரvமாக வைக்கப்படும் Caravan போன்றவற்றுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.

எனினும், விதிகள் கன்டோன்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரணமாக, பெர்ன் கன்டோனில் (Bern) 10 சதுர மீற்றர் பரப்பளவும் 2.5 மீற்றர் உயரமும் கொண்ட சிறிய கட்டிடங்களுக்கு அனுமதி தேவையில்லை. ஆனால் சூரிச் கன்டோனில் (Zürich) இந்த வரம்பு வெறும் 2 சதுர மீற்றர் பரப்பளவும் 1.5 மீற்றர் உயரமும் மட்டுமே.

அதேபோல், ஒரே இடத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் நிறுத்தப்படும் Caravan-களுக்கும் பல நகராட்சிகளில் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

சுவிட்சர்லாந்தில் வீடு மற்றும் தோட்டம் வைத்திருப்பது பலரின் கனவாக இருந்தாலும், இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. எனவே மரம் வெட்டுவது முதல் சிறிய கட்டமைப்புகளை அமைப்பது வரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன் உள்ளூர் நகராட்சி விதிகளை சரிபார்ப்பது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button