பாசல் யூரோஏர்போர்ட்: கோடைக்காலத்துக்கு 8 புதிய விமான சேவைகள் சுவிட்சர்லாந்தின் EuroAirport Basel-Mulhouse-Freiburg இந்த கோடைக்கால அட்டவணையில் எட்டு புதிய சர்வதேச விமான சேவைகளை அறிவித்துள்ளது. மார்ச் 29 முதல் அக்டோபர் 31 வரை இந்த புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. புதிய சேவைகளின் கீழ் துருக்கியின் Bodrum, மால்டோவாவின் Chisinau, பிரான்சின் Lille, மொன்டேனேக்ரோவின் Podgorica, ஸ்வீடனின் Stockholm, போலந்தின் Warsaw மற்றும் Poznan, ருமேனியாவின் Tirgu Mureș போன்ற நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் பாசல் விமான நிலையம் தனது சர்வதேச இணைப்புகளை மேலும் விரிவுபடுத்துகிறது. ஆனால், இந்த சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்படவுள்ள ஒரு காலப்பகுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 15 முதல் மே 20 வரை விமான நிலையத்தின் பிரதான ரன்வே (runway) புதுப்பிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பெரும்பாலான விமான சேவைகள் அந்த காலத்தில் ரத்து செய்யப்படுகின்றன. இந்த காலப்பகுதியில், easyJet மட்டும் குறைந்த அளவிலான விமான சேவைகளுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயண திட்டங்களை சரிபார்த்து ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கோடைக்கால விடுமுறை காலத்தை முன்னிட்டு இந்த புதிய சேவைகள் பயணிகளுக்கு அதிக விருப்பங்களை வழங்கும் நிலையில், இடைக்கால ரன்வே பணிகள் விமான போக்குவரத்தில் தற்காலிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். KeystoneSDA