ஜெனீவா–ஜூரா இணைந்து புதிய சிறை திட்டம் சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக இரண்டு கன்டோன்கள் இணைந்து ஒரு சிறைச்சாலை அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. Jura மற்றும் Geneva கன்டோன்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ஜூரா பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை உருவாக்கி, அதை இரு கன்டோன்களும் இணைந்து நிதியளித்து நிர்வகிக்க வேண்டும் என முன்வைத்துள்ளனர். இந்த முன்மொழிவு குறிப்பாக ஜெனீவா கன்டோனில் நீண்டகாலமாக நிலவி வரும் சிறை நிரம்பிய நிலையைத் தீர்க்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அங்குள்ள சிறைச்சாலைகள் ஏற்கனவே அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ள நிலையில், புதிய கட்டிடம் அமைக்க தேவையான நிலப்பரப்பு இல்லாததும் ஒரு முக்கிய சிக்கலாக உள்ளது. மற்றொரு புறம், ஜூரா கன்டோனில் புதிய கட்டிடத்திற்கு போதுமான இடவசதி இருப்பதுடன், தற்போதுள்ள சிறைச்சாலை பழமையான கோட்டையை அடிப்படையாகக் கொண்டதால், அது காலத்திற்கேற்ற வசதிகள் இல்லாததாகவும் கருதப்படுகிறது. இதனால், இரு கன்டோன்களுக்கும் இந்த இணைப்பு திட்டம் ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் ஒரு கன்டோன் மற்றொரு கன்டோனில் கைதிகளை தங்க வைப்பது புதிய விஷயம் அல்ல. ஆனால், இரண்டு கன்டோன்கள் இணைந்து ஒரே சிறைச்சாலையை கட்டி, இயக்கும் முயற்சி இதுவரை இடம்பெறவில்லை என்பதால், இந்த திட்டம் நாட்டில் ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. WRS