சுவிட்சர்லாந்தில் 3-இல் 2 இளைஞர்கள் செய்திகள் மற்றும் தகவல்களை அறிய AI பயன்படுத்துகின்றனர்! – 2024-ஐ விட மூன்று மடங்கு அதிகரிப்பு; ZHAW புதிய ஆய்வில் தகவல்.

சுவிட்சர்லாந்தில் உள்ள 12 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களில் மூவரில் இருவர் (66%) தற்போது செய்திகள் மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதாக சூரிச் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (ZHAW) வியாழக்கிழமை வெளியிட்ட ‘ஜேம்ஸ்’ (JAMES) ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிஸ்காம் (Swisscom) நிறுவனத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஆய்வில், 2024-ஆம் ஆண்டு 22 சதவீதமாக இருந்த AI தகவல் பயன்பாடு, தற்போது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
தகவல்களைத் தேடுவதில் தேடுபொறிகள் மற்றும் மெசேஜ் செயலிகளுக்கு அடுத்தபடியாக ChatGPT போன்ற AI கருவிகள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
AI பதில்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை இளையோர் கற்றுக்கொள்வதுடன், அவற்றைச் சுயாதீனமான பிற மூலங்களுடன் சரிபார்ப்பது அவசியம் என ஆய்வு இயக்குநர் கிரேகோர் வாலர் (Gregor Waller) வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, வசதியான குடும்பங்களில் 44 சதவீதம் பேர் கட்டண AI சந்தா வைத்திருக்கும் நிலையில், குறைந்த வருமானக் குடும்பங்களில் 23 சதவீதம் பேர் மட்டுமே வைத்துள்ளதால் டிஜிட்டல் இடைவெளி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



