மருத்துவமனைக்கு விளையாட்டாக விடுத்த குண்டு மிரட்டல்! – 5 மணிநேர மீட்புப் பணி மற்றும் 20,000 பிராங்குகள் செலவு; பதின்ம வயது இளைஞருக்குத் தண்டனை விதித்த சுவிஸ் நீதிமன்றம்.

சுவிட்சர்லாந்தின் கிராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் உள்ள ஷியர்ஸ் (Schiers) மருத்துவமனைக்கு, விளையாட்டிற்காகக் குண்டு மிரட்டல் விடுத்த பதின்ம வயது இளைஞருக்கு நீதிமன்றம் சமூக சேவைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2025 டிசம்பர் 16-ஆம் தேதி, ஷியர்ஸ் மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு வந்த மர்மத் தொலைபேசி அழைப்பில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் இணைந்து சுமார் ஐந்து மணிநேரம் தீவிர சோதனை நடத்தினர்.
விசாரணையில், ஜெர்மனியைச் சேர்ந்த 17 வயது இளைஞரும், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 16 வயது ஜெர்மன் குடிமகனும் இணைந்து ‘விளையாட்டிற்காக’ இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இளைஞருக்குக் கிராபுண்டன் சிறார் குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் சமூக சேவைத் தண்டனை விதித்துள்ளது.
மற்றொரு இளைஞர் மீது ஜெர்மனியில் தனி வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த ஐந்து மணிநேர அவசரகால நடவடிக்கைக்காக ஏற்பட்ட சுமார் 20,000 சுவிஸ் பிராங்குகள் செலவை அந்த இரு இளைஞர்களிடமிருந்தும் வசூலிப்பதா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.



