சூரிச் தொடக்கப்பள்ளி கல்வித் தரம் குறித்து பெற்றோர் தொடர்ந்த வழக்கு! – பள்ளி ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை வழங்க சூரிச் நிர்வாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) நகராட்சி ஒன்றில் உள்ள தொடக்கப்பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் மற்றும் ‘கரிகுலம் 21’ (Curriculum 21) கல்வித் திட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்துச் சந்தேகமடைந்த இரு சிறுமிகளின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில், சூரிச் நிர்வாக நீதிமன்றம் பெற்றோருக்குச் சாதகமாக ஓரளவு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2025 பிப்ரவரியில், பள்ளி ஆலோசனைக் கூட்டங்களின் தீர்மானங்கள், பாடப்புத்தகங்களுக்கான ரசீதுகள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட குறிப்புகளை வழங்குமாறு பெற்றோர் கோரியிருந்த நிலையில், பள்ளி நிர்வாகம் சில ஆவணங்களை மட்டுமே வழங்கி மற்றவற்றை நிராகரித்திருந்தது.
இதனை எதிர்த்துப் பெற்றோர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுத் தகவல் சட்டத்தின் கீழ் பெற்றோருக்கும் தகவல்களைப் பெறும் உரிமை உண்டு எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், பாடப்புத்தக ரசீதுகள், கல்வித் தரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மறுஆய்வு ஆவணங்கள் மற்றும் பள்ளி ஆலோசனைக் கூட்டங்களின் முடிவுகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், தனிநபர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டு ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், பொதுத் தகவல் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் ஆசிரியர்களின் தனிப்பட்ட குறிப்புகள் ரகசியமாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றச் செலவுகளில் பாதியைப் பள்ளி நிர்வாகமும், மீதமுள்ள பாதியான 1,310 சுவிஸ் பிராங்குகளைப் பெற்றோரும் ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள 2,121 நகராட்சிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 10 சதவீத நகராட்சிகள் மட்டுமே கோரப்பட்ட ஆவணங்களை முழுமையாக வழங்கியுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு பொதுத் தகவல் வெளிப்படைத்தன்மை குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது.



